தமிழ்நாடு

நீட் தேர்வுக்காக இளைஞர்கள் போராட முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

DIN

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராடியது போல், நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி போராட , தமிழக இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரி அன்புமணி தலைமையில், பாமகவினர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை மூத்த வழக்குரைஞர் காந்தி தொடங்கி வைத்தார்.
இதில் அன்புமணி பேசியது:
பிளஸ் 2 தேர்வில் 200 -க்கு 1,99 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்குக்கூட மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. இதனால் பெற்றோரும், மாணவர்களும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்தபோது, இதுதொடர்பான மசோதாக்கள் தன்னிடம் வந்தால் ஒப்புதல் தருவாகக் கூறினார். நாடாளுமன்றத்தில் அதிமுகவின் சார்பில் 37 எம்.பி., க்கள் உள்ளனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. பாமகவிடம் 7 எம்.பி., க்கள் இருந்தபோது, இலங்கை பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை 5 நாள்கள் ஒத்திவைக்க செய்தோம்.
கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 3,400 இருந்தன. இதில் 3,300 இடங்கள் சமச்சீர் கல்வி பயின்ற மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன. இந்த ஆண்டு மொத்தமுள்ள 3,377 இடங்களில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 3 ஆயிரமும், சமச்சீர் கல்வியில் படித்த மாணவர்களுக்கு 300 இடங்களும்தான் என்றால், இது சமூக நீதியா?
போராட அழைப்பு: எனவே, ஜல்லிக்கட்டுக்காகப் போராடியது போல், நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி போராட தமிழக இளைஞர்கள் முன்வர வேண்டும் என அன்புமணி அழைப்பு விடுத்தார்.
அன்புமணிக்கு, மூத்த வழக்குரைஞர் துரைசாமி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், கல்வியாளர்கள் எஸ்.எஸ்.ராஜகோபாலன், பிரின்ஸ் கஜேந்திரபாபு, பாமக தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வழக்குரைஞர் பாலு, டாக்டர்கள் அ.ராஜசேகரன், ஜி.ஆர்.ரவீந்திரநாத், காசி, தமிழர் அறம் சி.இராமசாமி, பேராசிரியர் யூசுப் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் பங்கேற்பு: சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி, அரியலூர், பல்லடம் , பழநி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களும், அவர்களது பெற்றோரும் பெருமளவில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT