நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி சென்னையில் திமுகவின் மனிதச் சங்கிலி போராட்டம் துவங்கியது!
மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி சென்னையில் திமுகவின் மனிதச் சங்கிலி போராட்டம் தற்பொழுது துவங்கியது.
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி சென்னையில் திமுகவின் மனிதச் சங்கிலி போராட்டம் தற்பொழுது துவங்கியது.
மருத்துவ மாணவர் சேர்க்கையானது இனி நாடுமுழுவதும் 'நீட்' எனப்படும் தேசிய திறன் மற்றும் தகுதித் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த தேர்வு மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதால், தமிழக மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறி, பல்வேறு தமிழக கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனாலும் மத்திய அரசின் பிடிவாதத்தின் காரணமாக இந்த முறை கடந்த மே மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. தற்பொழுது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
அதேசமயம் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி திமுக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இன்று சேலம் கட்சராயன் ஏரியில் திமுக சார்பாக நடந்து வரும் தூர் வாரும் பணியினை பார்வையிடச் சென்ற ஸ்டாலின் வழிமறித்து சேலம் எல்லையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதனைக் கண்டித்து சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் மனிதச் சங்கிலி போராட்டமானது 2 அல்லது 3 நாட்களில் நடைபெறும் என்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் திமுகவின் மனிதச் சங்கிலி போராட்டம் தற்பொழுது துவங்கியது.சைதாப்பேட்டையில் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது.