சட்ட சிக்கலின்றி நீட் தேர்வுக்கு விலக்கு: முதல்வர் பழனிசாமி
சட்ட சிக்கல் ஏதும் ஏற்படாமல் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
சட்ட சிக்கல் ஏதும் ஏற்படாமல் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை திருவொற்றியூர் -மணலி நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தை, முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இதையொட்டி நடைபெற்ற விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நீட் தேர்வு போன்ற சிக்கலான பிரச்னைகள் ஏற்படும்பொழுது அவற்றுக்கு தீர்வு காண்பதில் காலதாமதம் ஏற்படுவது சகஜம்தான். மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே இதுகுறித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், மாநில அரசைப் பொருத்தவரை, தமிழக மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது, அவர்களது நலன் காக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடியைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். தமிழக அமைச்சர்களும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடம் இதுகுறித்து எடுத்துரைத்துள்ளனர். தொடர்ந்து மத்திய அரசுக்கு, மாநில அரசு அழுத்தம் கொடுக்கும். நீதிமன்ற தீர்ப்பையும் கவனத்தில் கொண்டு, சட்ட சிக்கல் ஏதும் ஏற்படாத வகையில் இதில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம் என்றார் முதல்வர்.