சரக்கு, சேவை வரிச் சட்டத்தை செப்டம்பர் மாதம் அமல்படுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே விதமான வரிவிதிப்பு முறை இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும், வரிச் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதத்திலும் இச்சட்டம் அமைந்தாலும், இதனை அமல்படுத்துவதால் எந்த மக்களும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இதுவரை மாநில நிதியமைச்சர்களுடன் 15 கூட்டங்களை நடத்தியிருக்கும் மத்திய நிதியமைச்சர் பல்வேறு பொருள்களுக்கான வரிகளை அறிவித்து வருகிறார்.
5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையில், 1200-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கான வரிவிதிப்பு முறைகளையும், சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளையும் வகுத்திருந்தாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தில் இருக்கும் மக்கள் மத்தியில், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் மூலம், தாங்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி விடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அமைப்பு சாரா தொழில்கள், ஹோட்டல்கள், வட்டார மொழி சினிமா, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளித் தொழில், பீடித் தொழில், தங்க நகை செய்யும் வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும், இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வரி விகிதத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருள்கள், முன்பு இருந்ததைவிட இப்போது குறைவாக உள்ளன என்று நுகர்வோர் அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் கடும் விலைவாசி உயர்வைச் சந்திக்க நேரிடுமோ என்ற கவலை அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அவசர அவசரமாக அமல்படுத்துவது பற்றி மத்திய நிதியமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
எனவே, அதற்குரிய கால அவகாசம் கொடுக்கும் வகையில், ஜூலை மாதம் அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை செப்டம்பர் மாதத்துக்குத் தள்ளிவைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தூர்வாரும் பணி: சோழவரம், அயப்பாக்கம், பாடியநல்லூர் பகுதிகளில் திமுக சார்பில் தூர்வாரி சீரமைக்கப்பட்ட குளங்களை மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பார்வையிட்டு குளங்களின் கரைகளில் வேம்பு, புங்கம் செடிகளை நட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.