அழுத்தம் கொடுத்ததால்தான் சரக்கு - சேவை வரி குறைக்கப்பட்டது
சரக்கு -சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக வணிகர்கள், உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர்கள் ஆகியோர் அளித்த கோரிக்கைகள் குறித்து அழுத்தம் கொடுத்ததால்தான் மத்திய அரசு 60 -க்கும் மேற்பட்ட
சரக்கு -சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக வணிகர்கள், உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர்கள் ஆகியோர் அளித்த கோரிக்கைகள் குறித்து அழுத்தம் கொடுத்ததால்தான் மத்திய அரசு 60 -க்கும் மேற்பட்ட பொருள்களுக்கான வரி விகிதத்தை மாற்றியமைத்துள்ளது என்று தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
வீடியோகான், அசோசெம், சி.இ.எம்.ஏ. ஆகியன சார்பில், சரக்கு -சேவை வரி தொடர்பான மாநாடு, சென்னை கிண்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், நிதியமைச்சர் ஜெயக்குமார் பேசியது:
ஜிஎஸ்டி மாநிலத்துக்கு உகந்ததா, வணிகர்களுக்கு நன்மை பயக்குமா என்று பல கேள்விகளை கேட்கின்றனர். மாநிலத்துக்கு நிதி தன்னாட்சி, வரி வசூலிக்கும் நிலை இல்லாதபோது, ஜிஎஸ்டியை அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தோம்.
மாநிலங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு கூறியது. அப்படி கூறியவுடன் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை சட்டமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதையடுத்து, அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாநில ஜிஎஸ்டி சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர்கள் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவைதொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி 1,200 பொருள்களில் 60-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
சரக்கு -சேவை வரி அமல்படுத்தும்போது, பொருளாதாரத்தில் 1 - 2 சதவீதம் உற்பத்தி திறன் உயரும்; விலைவாசி கட்டுப்படுத்தப்படும். பலமுனை வரி தவிர்க்கப்படும் என்றார் அவர்.