விவசாயிகளின் கடனுக்கான வட்டிக்கு மானியம் அளிப்பது என மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பது ஏமாற்றுவேலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
மழை இல்லாதது, கர்நாடகம் தண்ணீர் தர மறுத்தது போன்ற காரணங்களால் பயிர்கள் அழிந்து கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகள், தாங்கள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யக் கோரி போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், விவசாயிகள் கடனை மாநில அரசு விரும்பினால் தள்ளுபடி செய்யலாம். அதற்கு மத்திய அரசு உதவி செய்யாது என மத்திய நிதியமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து புதன்கிழமையன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டித் தொகைக்கு அரசு மானியம் வழங்கும் என முடிவு செய்திருக்கின்றனர்.
இந்த முடிவு ஏமாற்று வேலையாகும். ஏனெனில், தமிழகத்தில் கூட்டுறவு அமைப்புகளில் விவசாயக் கடன் பெற்று உரிய காலத்தில் திருப்பிச் செலுத்திவிட்டால் வட்டி கிடையாது.
எனவே, வட்டிக்கு மானியம் அளித்திடுவோம் என்று அமைச்சரவை முடிவு செய்திருப்பது ஏமாற்று வேலையாகும்.
இதே நிலை நீடித்தால், விவசாயிகள் மீண்டும் கடன் வாங்க வேண்டியச் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து, அவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.