அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றசாட்டுக்கள் பதிவு!
அமலாக்கத்துறையினர் தொடர்ந்துள்ள அந்நிய செலவாணி மோசடி வழக்கில், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், சசிகலா மீது இன்று குற்றசாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது
சென்னை: அமலாக்கத்துறையினர் தொடர்ந்துள்ள அந்நிய செலவாணி மோசடி வழக்கில், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், சசிகலா மீது இன்று குற்றசாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளி சசிகலா. . அவர் தற்பொழுது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சூப்பர் டூப்பர் டிவி என்னும் நிறுவனத்திற்காக வெளிநாடுகளில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில், அந்நிய செலவாணி மோசடி நடந்ததாக, 1996-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு தொடர்ந்தது. அவரது உறவினர்களான சுதாகரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றவாளிகள் ஆவார்கள். இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சுதாகரன் சிறையில் இருக்கும் பொழுதே, இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு இரண்டு முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அப்பொழுது கர்நாடக சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வந்த காரணத்தால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஜர்படுத்த இயலாது என்று கர்நாடக காவல்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்பொழுது இந்த வழக்கு விசாரணைக்காக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சுதாகரன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் மீது குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சிறையில் உள்ள சசிகலா நண்பகல் 12 மணி அளவில், 'வீடியோ கான்பெரன்ஸிங்' முறையில் நீதிபதி ஜாஹிர் ஹுசைன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். ஏற்கனவே பாஸ்கரன் அங்கு ஆஜர் ஆகியிருந்தார். சுமார் 50 நிமிடங்கள் சசிகலாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
ஆனால் தங்கள் மீதான குற்றசாட்டுகளை பொய்யானவை என்று கூறி சசிகலா மற்றும் பாஸ்கரன் ஆகிய இருவரும் மறுத்தனர். பின்னர் சசிகலா மீது குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டது