தமிழ்நாடு

வெளிநடப்புச் செய்தாலும் அவையில் பங்கேற்கிறது திமுக

DIN

அதிமுக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வெளிநடப்புச் செய்யும் கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டாலும் மக்கள் பிரச்னைகளை விவாதிக்க உடனே அவையில் பங்கேற்கிறது என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்துவதற்கு ஜனநாயக மன்றமான சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. ஆனால் ஆளும் அதிமுகவைப் பொறுத்தவரை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதும் சரி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகிய அனைவருமே சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதங்களை அனுமதித்ததே இல்லை.
மக்கள் பிரச்னைகள் பற்றி ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபடுகிறோம். கேள்வி நேரம், நேரமில்லா நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தி, தொகுதிப் பிரச்னைகள் குறித்து ஒவ்வொரு திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் தினமும் கேள்விகளை எழுப்புகிறார்கள். குறிப்பாக மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வு, மாட்டிறைச்சி விவகாரம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட்டு வருவது, மதுவிலக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களைக் கைது செய்தது உள்ளிட்ட பல்வேறு பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் ஆளுங்கட்சியினர் என்னதான் குறுக்கீடு செய்தாலும், திமுக சார்பில் தொடர்ந்து வாதாடி வருகிறோம்.
பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை எழுப்பினால், அவற்றுக்குப் பொறுப்பான பதில்களை அளிப்பதில்லை என்பதை ஆளுங்கட்சியினர் முழுநேர வழக்கமாகவே கடைப்பிடித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில்தான் பிரதான எதிர்க்கட்சியான, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தால், அப்படியே வீடு திரும்பி விடுவதில்லை. அவைக்குத்தான் உடனடியாக மறுபடியும் செல்கிறோம்.
எங்களின் ஜனநாயகப் பூர்வமான எதிர்ப்பைத் தெரிவித்து விட்டு, உடனடியாக மீண்டும் அவைக்குத் திரும்புவதை வெளியிடாமல், ஒரு சில ஊடகங்கள் திசை திருப்பும் வகையில் செயல்படுவது வேதனையளிப்பதாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT