சென்னை: முக்கிய கட்டமைப்புப் பணிகளுக்காக வெட்டப்பட வேண்டிய மரங்களை, பெயர்த்தெடுத்து மாற்று இடங்களில் நடவு செய்யும் தொழில்நுட்ப திட்டம் குறித்து வனத்துறையின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து வனத்துறையின் 7-அறிவிப்புகள் 2017-2018
1. காப்புக் காடுகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல்
நீர் மற்றும் மண் வளப் பாதுகாப்பு என்பது வன மேலாண்மையில் முக்கியமான யுக்தியாகும். கடந்த 2016ஆம் ஆண்டில் பருவமழை பொய்த்து வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு வனங்களிலும் நீர்வரத்து இல்லாமல், வனங்கள் காய்ந்து வன உயிரினங்கள் கூட்டமாக காட்டை விட்டு வெளியேறி, மனித-வன உயிரினங்கள் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆகவே மழை நீரினை உரியமுறையில் சேமித்து வைத்து பயன்படுத்துவதற்காகவும், நிலத்தடி நீரினை மேம்படுத்துவதற்காகவும், தாவரங்களுக்கு செறிவூட்டுவதற்கும் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படுவது அவசியமென்பதை கருத்தில் கொண்டு 2017-18ஆம் ஆண்டில் பண்ணைக் குட்டை ஒன்று ரூ.500 இலட்சம் வீதம், நடப்பாண்டில் 60 பண்ணைக்குட்டைகள் ரூ.3 கோடி செலவில் அமைக்க இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி 3 ஆண்டுகளுக்குத் தொடர்கிற இத்திட்டம் மேற்கொள்ளப்படும்.
2. வனத்துறையில் பணிபுரியும் விளையாட்டு விர, வீராங்கனைக்கான விளையாட்டு வசதிகளை மேம்படுத்துதல்
வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு வேட்டைத் தடுப்பு நடவடிக்கைகள், மனித-வன உயிரின மோதல்களைக் கட்டுப்படுத்துதல், தோட்டங்கள் எழுப்புதல் ஆகிய களப்பணிகளில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டு வனத்துறையில் அகில இந்திய வனப்பணி அலுவலர்கள் முதல் கடை நிலையில் உள்ள வனக்காவலர்கள் வரையிலான 10,208 நபர்களை கொண்ட உறுதியான அமைப்பு உள்ளது. கடமைகளை சீரிய முறையில் நிறைவேற்ற உடல் மற்றும் மனநல ஆரோக்கியம் இன்றியமையாததாகும்.
ஆண்டுதோறும் அகிலஇந்திய அளவிலான வனத்துறையினர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு வனத்துறை அணி கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களையும், கோப்பையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றது. சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற 23வது அகில இந்திய வனத்துறையினர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்ற தமிழக வனத்துறை அணி 15 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள், 14 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் 17 நான்காம் இடங்களை பெற்று 146 புள்ளிகளுடன், அகில இந்திய அளவில் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
தமிழக வனத்துறைப் பணியாளர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டிற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு உயர்ப்பயிற்சி கழகத்தில் ரூ.75 இலட்சம் செலவில் உள் விளையாட்டரங்கம் ஒன்றும், வைகை அணையிலுள்ள தமிழ்நாடு வனவியல் பயிற்சிக் கல்லூரியிலும், கோயம்புத்தூரிலுள்ள வன உயர்ப்பயிற்சிக் கழகத்திலும் தலா ரூ.10 இலட்சம் செலவில் உடற்பயிற்சிக் கூடங்களும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி அமைக்கப்படும். மேற்படி இனங்களுக்கான 2017-18 ஆண்டிற்கான மொத்தச் செலவினம் ரூ.95 இலட்சம் ஆகும்.
3.வன விரிவாக்க மையங்களின் பணிகளை மேம்படுத்துதல்
பெருமளவிலான காடு வளர்ப்பு நடவடிக்கையின் மூலம் நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் மரப்பரப்பினை அதிகரித்தல்; புவிபரப்பளவில் ஒட்டுமொத்த மரப்பரப்பினை 33% ஆக அதிகரித்தல்; வேளாண் நிலங்கள் / சமுதாய நிலங்கள்/இதர நிலங்கள் ஆகியவற்றின் உற்பத்தி திறன் அதிகரித்தல்; மரம் வளர்ப்போர் சங்கங்கள், சுயஉதவி குழுக்கள் மற்றும் இதர ஆர்வம் கொண்ட குழுக்களை கண்டறிந்து மாதிரி வேளாண் காடுகளை உருவாக்க ஊக்கப்படுத்துதல்; மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம் வறுமையினை போக்குதல் ஆகியன வன விரிவாக்க மையங்களின் நோக்கங்களாக உள்ளன. மாநிலத்தில் தற்போதுள்ள 32 வனவிரிவாக்க மையங்களில் நடப்பாண்டில், 8வன விரிவாக்க மையங்களில் ரூ.3.75 கோடி செலவில் மறுஊக்கப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள வனவிரிவாக்க மையங்களில், இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும். மரம்சாரா வனப்பொருட்களுக்கு மதிப்பைக் கூட்டுவதிலும், வனப்பகுதியையொட்டியுள்ள கிராம மற்றும் பழங்குடியினருக்கு வாழ்வாதாரத்திற்கு ஆதரவு தரும் வகையிலும் இம்மையங்களின் செயல்பாடுகள்இருக்கும்.வனத்தையொட்டியுள்ள கிராம மக்களிடையே வனத்துறையினை ஒரு முகமையாக நோக்கும் எண்ணம் அதிகரித்துள்ளதால், மக்களின்நம்பிக்கையையும், மதிப்பினையும் பெறுவதற்கு, வனத்துறையின் பங்கினை “ஒழுங்கு முறை அமைப்பாளர்” என்ற நிலையிலிருந்து “மேம்பாட்டிற்கான வழிகாட்டி’ என்ற நிலைக்கு மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
4. பெயர்த்தெடுத்த மரங்களை மாற்று இடத்தில் நடவுசெய்யும் தொழில்நுட்பத் திட்டம்
புவியில் உயிர்வாழ மனித இனத்திற்கு பிராண வாயு தேவைப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. மரங்கள், கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொண்டு, பிராண வாயுவை பெருமளவில் உற்பத்தி செய்து வெளிவிடுகின்றன. எனவே, நடவு செய்யப்பட்ட ஒவ்வொரு மரமும் முக்கியமானதாகும். மேலும், அவை பாதுகாக்கப்படவும் வேண்டும். சாலைகளை அகலப்படுத்துதல், கேபிள்கள் / குழாய்களைப் பதித்தல் ஆகிய மேம்பாட்டுப் பணிகளின் காரணமாக, மரங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பொதுவாக, மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்படுகின்றன. அருகாமையில் உள்ள பகுதிகளில் மீளவும் நடப்படும் மரம், நமது தேவையை பூர்த்தி செய்ய சில வருடங்களாகிறது. எனவே, மரங்களை வெட்டாமல், அவற்றை மாற்றி நடுதல் என்பது சிறந்த தேர்வாக இருக்கும். மேம்பாட்டுப் பணிகளின் காரணமாக நன்கு வளர்ந்த மரங்கள் வெட்டப்படுவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.
2017-18ஆம் ஆண்டில் மரத்தை வேருடன் பிடுங்கி மாற்றி நடவு செய்யும் கருவிகளை தமிழ்நாட்டு வனத்துறையின் வாயிலாக வாங்குவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி ரூ.1 கோடி செலவிடப்படும்.
5. வனப்பணியாளர்களுக்கான குடியிருப்புக் கட்டடங்களைக் கட்டுதல் :
கெடுமதி கொண்ட கடத்தல்காரர்கள், வேட்டையாடுபவர்கள் உள்ளிட்ட சமூக விரோதிகளிடமிருந்து வனத்தையும், வன வளத்தினையும் பாதுகாத்திட மிகுந்த சிரமங்களுக்கிடையே உயிருக்கு ஆபத்துநேரிடும் நிலையிலும் வனத்துறை சீருடைப் பணியாளர்கள் தீரத்துடன் பணிபுரிந்துவருகின்றனர். அவர்களது குடும்பங்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய இடங்களில் பாதுகாப்பான வணக்குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
இதனை கருத்தில் கொண்டு, வனக்காப்பாளர் படிநிலையிலிருந்து மாவட்ட வன அலுவலர் படிநிலையிலுள்ள அலுவலர்கள் வரையிலுமுள்ள அலுவலர்களுக்கு 2017-18, 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் முறையே ரூ.2 கோடி, ரூ.4 கோடி, ரூ.6 கோடி மற்றும் ரூ.8 கோடி, ஆக மொத்தம் ரூ.20 கோடி செலவில் வனப்பணியாளர் குடியிருப்புக் கட்டடங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி கட்டப்படும்.
6. தொலைதுார கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர்களது வசிப்பிடங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்துதல்
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தருமபுரி மண்டலத்தில் 195 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. வனத்தினுள் பழங்குடி மக்கள் வசிப்பதால் மின் கம்பிகள் அமைத்தல், குடிநீருக்கான குழாய்கள் பதித்தல் போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது. மேலும், வெவ்வேறு கடினமான நிலப்பரப்புகளில் வாழ்விடங்கள் அமைந்துள்ளதால் இவ்வசதிகளை உருவாக்கி தருவது இன்னும் கடினமானதாகிறது.
ஒதுக்குக் காட்டினுள் சூரிய மின்சக்தி மூலம் வன உயிரினங்களுக்கான நீர்த் தொட்டிகளை வெற்றிகரமாக அமைத்ததன் அடிப்படையில், சூரிய மின்சக்தி மூலம் தொட்டிகளில் நீரினை நிரப்பி பழங்குடியினர் வசிப்பிடங்களுக்கு குடிநீர் வசதியை உருவாக்கித்தர அரசு தீர்மானித்துள்ளது.
கோட்டுர்மலை, ஏரிமலை மற்றும் ஆலக்கட்டு (பாலக்கோடு சரகம்), பண்ணப்பட்டி ஒகேனக்கல்சரகம்), ஏரியூர் மற்றும் குண்டக்கரை (பென்னாகரம் சரகம்) ஆகிய பகுதிகளில் இதற்கு முன்னோடியாக, 2017-18ஆம் ஆண்டில் ஒரு வசிப்பிடத்திற்கு தலா ரூ.13 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.78 இலட்சம் செலவில் சூரிய மின்சக்தி மூலம், நீர்த்தொட்டிகள் ஒசூர் வணக்கோட்டத்தில் ஏற்படுத்தப்படும்.
பழங்குடியினகிராமங்களில், அவர்களுடைய பாரம்பரிய மதிப்பினை சீர்க்குலைக்காத வகையில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
7. திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மலைக் கோட்டை அமைந்துள்ள மலையை பசுமைமிக்கதாக மாற்றும் திட்டம் மற்றும் பழனியில் மருத்துவ மரங்கள் கொண்ட பூங்கா அமைக்கும் திட்டம்
அ) திண்டுக்கல் மலைக் கோட்டை வரலாற்றுச் சிறப்பு மிகுந்த மலையாகும். இம்மலையை முதல்வர் ஆணையின்படி பசுமை மிக்கதாக மாற்ற அரசு முடிவெடுத்து, கடும் பாறைகளிலும் வளரக்கூடிய அத்தி, அரசு, ஆல், இச்சி, கல்இச்சி உள்ளிட்ட சிறந்த மரவகைகளை சிறப்பு நடவு முறையை பயன்படுத்தி மரம் ஒன்றிற்கு 1000 வீதம் 5,000 மரக்கன்றுகளை ரூ.50 இலட்சம் மொத்த திட்ட மதிப்பீட்டில் நடவு செய்யும் திட்டம் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.
ஆ) தமிழ் கடவுளாம் முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் முதல்வீடாம், பழனிமலையில் மூலிகை மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன. மெய்யறிவு வாய்ந்த சித்தர்கள் பலர் மருத்துவ குணம் படைத்த இம்மூலிகை மரங்களை சித்த மருத்துவத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இவ்வகை மருத்துவத் தன்மை வாய்ந்த நெல்லி, அசோகு, வில்வம், விள, மாதுளை, சந்தனம், கடுக்காய், தான்றி, பூவரசு, நீர்மருது, மகிழம், இலுப்பை உள்ளிட்ட 50 வகை மரங்களை தலா 200 எண்ணிக்கையில் மொத்தம் 10,000 மரக்கன்றுகளை நட்டு, பெரும் பூங்கா ஒன்று முதல்வர் ஆணையின்படி ரூ.3000 இலட்சம் செலவில் அமைக்கப்படும்.
C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
Source:
மானியக் கோரிக்கை எண். 54 சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.