முகப்பு
தமிழ்நாடு

ரூ.2,350 கோடியில் சூரியசக்தி மின்னழுத்தப் பூங்கா

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.2,350 கோடி மதிப்பீட்டில் 500 மெகாவாட் சூரியசக்தி மின்னழுத்தப்பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை அறிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:19 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.2,350 கோடி மதிப்பீட்டில் 500 மெகாவாட் சூரியசக்தி மின்னழுத்தப்பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை அறிவித்தார்.
சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு: தடையற்ற மின்சாரம் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
2008-ஆம் ஆண்டு அமலில் இருந்த மின்கட்டுப்பாட்டு முறைகள் 2015 மே முதல் முழுவதுமாக நீக்கப்பட்டு அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தற்போது 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
புதிய மின் திட்டங்கள்: நாகை மாவட்டம் மணல்மேடு பகுதியில் ரூ. 650 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய 400 கிலோ வாட் துணை மின் நிலையம் மற்றும் அதனோடு சேர்ந்த மின் பாதைகளும் அமைக்கப்படும்.
சென்னை கோயம்பேட்டில் ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் புதிய 400 கிலோ வாட் எரிவாயு காப்பிடப்பட்ட துணை மின் நிலையம் மற்றும் அதனோடு சேர்ந்த மின் பாதைகளும் அமைக்கப்படும்.
தற்போது 230 கிலோ வாட்டாக இருக்கும் தரமணி துணை மின் நிலையம் ரூ.710 கோடி மதிப்பீட்டில் 400 கிலோ வாட் எரிவாயு காப்பிடப்பட்ட துணை மின் நிலையமாகத் தரம் உயர்த்தப்படும் .
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் நரிப்பையூர் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களை உள்ளடக்கி 500 மெகாவாட் சூரியசக்தி மின்னழுத்தப் பூங்கா ரூ. 2,350 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் பொறியியல்-கொள்முதல்-கட்டுமானம் அடிப்படையில் அமைக்கப்பட்டு இயக்கப்படும்.
சென்னை மின்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், கூடுதலாக 31 புதிய துணை மின் நிலையங்கள், இயக்கத்தில் உள்ள 314 உயரழுத்த மின்மாற்றிகளைத் திறன் உயர்த்தும் பணிகள், புதிய 33/11 கிலோவாட் மின்னூட்டிகள் நிறுவும் பணிகள் மற்றும் இயக்கத்தில் உள்ள 33/11 கிலோ வாட் மின்னூட்டிகளை வலுப்படுத்தும் பணிகள் ஆகியன ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் .
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 230 கிலோ வாட் திறன்மிக்க 4 துணை மின் நிலையங்கள் , 110 கிலோ வாட் திறன்மிக்க 44 துணை மின் நிலையங்கள் , 33 கிலோ வாட் திறன்மிக்க 80 துணை மின் நிலையங்கள் என மொத்தம் 128 துணை மின் நிலையங்கள் ரூ.1,347 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, எரிசக்தித் திறன் சேவை லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு, அதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி முதலீட்டுடன் மாநிலத்தில் பயனுள்ள ஆற்றல் செய்திறன் நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உயர்த்திடவும் மற்றும் புதைபடிவ எரிபொருள் நுகர்வினைக் குறைக்கவும் வழிவகை காணப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →