கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி திட்டம்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்வது பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் என கண்டறியப்பட்டுள்ளது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்வது பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் என கண்டறியப்பட்டுள்ளது.
இப்பகுதியில் நிகழும் விபத்துகளில் பாதிக்கப்படுவர்கள் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மருத்துவமனைகளுக்கே கொண்டு செல்லப்படுகிறார்கள். இதனால், பெரும்பாலானவர்கள் செல்லும் வழியிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சை அல்லது திருச்சியில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் பரிந்துரையின் பேரில், தமிழக அரசு கடந்த 3.02.2009 அன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான ஆணையைப் பிறப்பித்தது. பின்னர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெரம்பலூர் - அரியலூர் பிரதான சாலையில் உள்ள ஒதியம் ஊராட்சியில் ரூ. 98 கோடியில், அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, மருத்துவக் கல்லூரிக்கு தேவையான இடத்தை, ஆ. ராசாவின் பெற்றோர் பெயரில் உள்ள ஆண்டிமுத்து - சின்னபிள்ளை அறக்கட்டளை சார்பில், 30 ஏக்கர் 28 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, அப்போதைய சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 2010 பிப்ரவரி 4ஆம் தேதி அப்போதைய தமிழக துணை முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின், பெரம்பலூரில் நடைபெற்ற அரசு விழாவில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அடிக்கல்லை நாட்டினார். 23.07.10-ல் நிர்வாக அனுமதியும், 30.12.10-ல் தொழில்நுட்ப அனுமதியும் வழங்கி, ரூ. 82 கோடியில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடப் பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதனடிப்படையில், ஒதியம் பகுதியில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், ரூ. 37 கோடியில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக் கட்டடமும், ரூ. 14 கோடியில் கலை இயல் அரங்க கட்டடமும், ரூ. 1.5 கோடியில் 120 மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறை கட்டடமும், ரூ. 6 கோடியே 22 லட்சத்தில் விடுதி கட்டடமும், ரூ. 1 கோடியே 50 லட்சத்தில் நூலகக் கட்டடமும், ரூ. 2 கோடியே 14 லட்சத்தில் மருத்துவக் கல்லூரி நிர்வாக கட்டடமும், ரூ. 1 கோடியே 18 லட்சத்தில் விரிவுரையாளர் மற்றும் 400 மாணவ, மாணவிகள் அமரும் வகையில் வகுப்பறை கட்டடமும், ரூ. 2 கோடியே 7 லட்சத்தில் 750 மாணவ, மாணவிகள் அமரும் வகையில் தேர்வு அரங்கம் மற்றும் கூட்ட அரங்கமும், ரூ. 3 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் செவிலியர் விடுதி கட்டடமும், ரூ. 3 கோடியே 5.2 லட்சம் மதிப்பீட்டில் பணியாளர்கள் ஓய்வு அறை கட்டடமும், ரூ. 63 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி முதல்வர், இருப்பிட மருத்துவர், கண்காணிப்பாளர், செவிலியர் கண்காணிப்பாளர் அலுவலகக் கட்டடமும், ரூ. 2 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவிகள் தங்குவதற்கு விடுதியும், ரூ. 1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் இதர பணியாளர்கள் குடியிருப்பு, வங்கி, அஞ்சல் நிலைய கட்டடம் உள்ளிட்ட பணிகள் தொடங்க தமிழக அரசால் ஒப்பந்தம் கோரப்பட்டது.
மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிக்கு 31.3.2011-ல் முதல்கட்டமாக அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்றது. பின்னர், தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்றதையொட்டி, பணிகள் நிறுத்தப்பட்டன. கிடப்பில் போடப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரி திட்டத்துக்கான கட்டுமானப் பணிகளை தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன் கூறியது:
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் விபத்தில் பாதிக்கப்படுபவர்கள், சிகிச்சைக்காக திருச்சி, தஞ்சை மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால், பாதிக்கப்பட்ட நபர்கள் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விடுவதால், உயிரிழப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும், மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும் விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. எனவே, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக, வழக்குரைஞர் பழனிமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், கடந்த 2009ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பை, தமிழக அரசு செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவகங்கை, திருவண்ணாமலையில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதுக்கு முன்பாக பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால், இதுவரை மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தனியாக டீன் நியமிக்கப்பட்டு, பெரம்பலூர் ஆட்சியரகத்தின் தரை தளத்தில் அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலருக்கு மாதந்தோறும் சம்பளம் மட்டும் சரியாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இன்றும், இந்த அலுவலகத்தில் தகவல் பலகை வைக்கப்பட்டு மூடியே கிடக்கிறது.
பெரம்பலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்ட தேதியில் அறிவித்த திருவாரூர், தேனி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு செயல்படுகின்றன. எனவே, மருத்துவக் கல்லூரி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.