தமிழ்நாடு

பருப்பு வகைகள், பூண்டு விலை சரிவு

DIN

தமிழகத்தில் பருப்பு வகைகள், பூண்டு ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. பருப்பு வகைகள் கிலோவுக்கு ரூ.20 வரையும், பூண்டு கிலோவுக்கு ரூ.110 வரையும் குறைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டு வடமாநிலங்களில் நன்றாக பெய்தது. இதன் காரணமாக, பருப்பு வகைகள், பூண்டு ஆகியவற்றின் விளைச்சல் தற்போது அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் பருப்பு வகைகள் மற்றும் பூண்டு வரத்து அதிகரித்து, விலை சரிந்துள்ளது.
பருப்பு வகைகள்: குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பருப்பு வகைகள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. துவரம் பருப்பு 100 கிலோ மூட்டை விலை கடந்த மாதம் ரூ.8500 ஆக இருந்தது. தற்போது அவற்றின் விலை ரூ.7,000 ஆக குறைந்துள்ளது. 90 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது ரூ.75 ஆக குறைந்துள்ளது. இதுபோல,100 கிலோ மூட்டை கொண்ட தான்சானியா துவரம் பருப்பு ரூ.7,000 ஆக இருந்தது. தற்போது, ரூ.5,000 ஆக இறங்கியுள்ளது. தான்சானியா துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.20 குறைந்து, ரூ.55க்கு விற்கப்படுகிறது.
உளுத்தம் பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த மாதம் ரூ.10,500 ஆக இருந்தது. தற்போது ரூ.9,000 ஆக குறைந்துள்ளது. உளுத்தம் பருப்பு கிலோவுக்கு ரூ.20 குறைந்து, ரூ.95 க்கு விற்கப்படுகிறது. பர்மா உளுத்தம் பருப்பு ஒரு கிலோ ரூ.100-இல் இருந்து ரூ.85க்கு குறைந்துள்ளது. 100 கிலோ பாசிபருப்பு மூட்டை கடந்த மாதம் ரூ.8,000 ஆக இருந்தது. இது தற்போது ரூ.6,800 ஆக சரிந்துள்ளது. மேலும், கிலோவுக்கு ரூ.10 குறைந்து, ரூ.75 ஆக இருக்கிறது. கடலை பருப்பு 50 கிலோ மூட்டை ரூ.4,500இல் இருந்து ரூ.3,400க்கு இறங்கியுள்ளது. ரூ.95க்கு விற்ற ஒரு கிலோ கடலை பருப்பு தற்போது ரூ.70க்கு விற்கப்படுகிறது.
பாதியாக சரிந்த பூண்டு விலை: குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பூண்டு விளைச்சல் தற்போது அமோகமாக உள்ளதால், விலை பாதியாக குறைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ஊட்டி மலைப்பூண்டு ரூ.200 ஆக இருந்தது. தற்போது, ரூ.90 ஆக குறைந்துள்ளது. நாட்டுப் பூண்டு கடந்த மாதம் ரூ.160க்கு விற்கப்பட்டது. தற்போது, ரூ.80க்கு விற்கப்படுகிறது. இரண்டாவது ரக நாட்டு பூண்டு ஒரு கிலோ ரூ.130 இல் இருந்து ரூ.60க்கு சரிந்துள்ளது.
விலை குறைவு குறித்து தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியதாவது:
பருப்பு ரகங்கள், பூண்டு ஆகியவை விளைச்சல் அதிகரித்ததால், விலை குறைந்துள்ளது. உயர் மதிப்பு ரூபாய் திரும்ப பெறுதல் நடவடிக்கை, வெளிநாடுகளில் இருந்து பருப்பு இறக்குமதிக்கு நடவடிக்கை ஆகியவை பருப்பு ரகங்கள் விலை குறைவுக்கு முக்கிய காரணம். இவற்றின் விலை வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்றார் எஸ்.பி.சொரூபன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT