பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பில்லை: ராதாகிருஷ்ணன்
பாதுகாப்புக் கோரி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களிடம் சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை: பாதுகாப்புக் கோரி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பயிற்சி மருத்துவர்களிடம் சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், அவரது சமாதான முயற்சி இன்றும் பலனளிக்கவில்லை. பயிற்சி மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர். பயிற்சி மருத்துவர்கள் இன்று மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன், பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் காரணமாக நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், இந்த போராட்டம் குறித்து ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கோவையிலும் போராட்டம் வெடித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையிலும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், சிசிடிவி கேமரா பொருத்தவும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
சம்பவத்தின் பின்னணி: மேல்மருவத்தூரைச் சேர்ந்த விஜய் என்ற பொறியியல் கல்லூரி மாணவர், சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பார்ப்பதற்காக அவரது உறவினர்களும், நண்பர்களும் வியாழக்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது பணியில் இருந்து முதுநிலை மருத்துவ மாணவி, இருவர் மட்டுமே பார்க்க அனுமதிக்க முடியும் என்று கூறினாராம். இதனால் நோயாளிகள் தரப்பினருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நோயாளியின் உறவினர்கள் முதுநிலை மருத்துவ மாணவியையும், அவருக்கு உதவியாக வந்த பயிற்சி மருத்துவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பணியில் இருக்கும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பணியில் இருந்த மருத்துவர்களைத் தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.