பேரவையில் முதல் முறையாக என்ன பேசினார் முதல்வர் பழனிசாமி: முழு விவரம்
தமிழக முதல்வராக பதவியேற்ற முதல்வர் பழனிசாமி, மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது இன்று பேரவையில் விளக்கம் அளித்தார்.
சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற முதல்வர் பழனிசாமி, மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது இன்று பேரவையில் விளக்கம் அளித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சட்டப்பேரவையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எம்.பில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது உரையாற்றுகையில்,
மனிதராய்ப் பிறப்பது பெரிதல்ல,
பிறப்பிலே ஒரு சிறப்பு வேண்டும்
வளர்வது பெரிதல்ல,
நல்ல ஞானத்தோடு வளர வேண்டும்
சாதிப்பது பெரிதல்ல,
சாதனைகள், சரித்திரத்தில் இடம் பெற வேண்டும்
அந்த வகையில்,
பிறப்பிலேயே, சரித்திர சாதனைக்கு சொந்தக்காரர் ஒருவர்,
உண்டு என்றால்......... அதுதான், அகிலம் போற்றும்,
மாண்புமிகு அம்மா அவர்கள் என்று மறைந்த முதல்வருக்கு புகழாரம் சூட்டினார்.
மேலும், இனம் காத்து, மொழி காத்து, நதி காத்து, சமூக நீதி காத்து, எளியவர், வறியவர், உயிர் காத்து, பெண் இனத்திற்கு பெருமை காத்து, கால் பதித்த இடமெல்லாம், வரலாற்றுச் சுவடுகளாய் பதித்து, எட்டுத் திசையிலும் வாழும் எட்டரை கோடி தமிழர்களின்....... இதய தெய்வம், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும், ஆல மரத்தினைத் தாங்குகின்ற வேராகி, தமிழினத்தின் தலைமகளாய், முதல்வராய், மக்களால் நான் மக்களுக்காக நான் என தவ வாழ்வு வாழ்ந்து, இன்றைக்கு வங்கக் கடலோரம் தெய்வமாய் நின்று நம்மை வழிநடத்திடும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை வணங்குகிறேன் என்றும் பேசினார்.
தொடர்ந்து பேசிய பழனிசாமி, புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில். ஆராய்ச்சி படிப்பு மாணவரான சேலம் மாவட்டம், அரிசிப்பாளையத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் 13.3.2017 அன்று இறந்துள்ளார் என்ற செய்தியை அறிந்தவுடன், துயரமுற்று, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தேன்.
புதுதில்லியில் வசந்த விஹார் காவல் நிலையத்தில் முத்துகிருஷ்ணன் இறந்தது தொடர்பாக குற்ற எண்.120/2017 இந்திய தண்டனை சட்டப்பிரிவு 306 மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 3(1) (ஒ)ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐந்து மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மறைந்த முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம் அவர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.
முத்துகிருஷ்ணன் அவர்களின் உடலை, அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அதன்படி, மறைந்த முத்துகிருஷ்ணன் அவர்களின் உடலை, அவரது சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசால் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டது.
மறைந்த முத்துகிருஷ்ணன் அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவருடயை குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாயை வழங்க ஆணையிட்டேன்.
மக்களவை உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் மறைந்த முத்துகிருஷ்ணனின் உடலுக்கு மரியாதை செலுத்தி, தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையான மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் வழங்கினர்.
முத்துகிருஷ்ணன் இறப்பு தொடர்பான வழக்கு புதுதில்லி வசந்த விஹார் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மத்திய தரைவழி மற்றும் போக்கு வரத்துத் துறை இணை அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள், மறைந்த முத்துகிருஷ்ணனின் உடலுக்கு சேலத்தில் உள்ள அவரது வீட்டுற்கு சென்று மரியாதை செலுத்தினார் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வெளி மாநிலத்திற்கு சென்று உயர்கல்வி படிக்கின்ற மாணவர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று இங்கே கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். அரசு வெளிமாநிலத்தில் உயர்கல்வி படிக்கச் செல்கின்ற மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாட்டை செய்யும் என்பதை தங்கள் வாயிலாக எதிர்க்கட்சி தலைவர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.