சசிகலாவுக்கு 'அதிமுக அம்மா அணி'; ஓபிஎஸ்ஸுக்கு புதிய பெயர் ஒதுக்கீடு
அதிமுக கட்சிப் பெயர் முடக்கப்பட்டதை அடுத்து, சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அணிகளுக்கு புதிய பெயர்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
புது தில்லி: அதிமுக கட்சிப் பெயர் முடக்கப்பட்டதை அடுத்து, சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அணிகளுக்கு புதிய பெயர்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் சசிகலா அணி வலியுறுத்தியதைப் போலவே, 'அதிமுக அம்மா அணி' என்ற பெயரே கட்சிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், ஓபிஎஸ் தரப்பில் 'அம்மா அதிமுக' என்ற பெயரை பன்னீர்செல்வம் தரப்பினர் வலியுறுத்தினர். ஆனால், அவர்களுக்கு புதிய பெயர் வழங்கப்பட்டிருப்பதாகவும், 'அதிமுக புரட்சித் தலைவி அம்மா' என்ற பெயரில் செயல்படுமாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சசிகலா தரப்பினர் தொப்பி சின்னத்திலும், பன்னீர்செல்வம் அணி இரட்டை மின் விளக்கு சின்னத்திலும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
முன்னதாக, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு தரப்பினரும், தங்களுக்குத்தான் சின்னம் சொந்தம் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், கட்சி சின்னத்தையும், கட்சிப் பெயரையும் முடக்கி நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.