சசிகலாவை திட்டி கடிதம் எழுதும் தமிழக மக்கள்: திக்குமுக்காடும் சிறை நிர்வாகம்
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவுக்கு நாள்தோறும் ஏராளமான கடிதங்கள் வந்து குவிவதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவுக்கு நாள்தோறும் ஏராளமான கடிதங்கள் வந்து குவிவதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
சசிகலாவுக்கு வந்த கடிதங்களில் ஏராளமானவை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் என்று கூறி சசிகலாவை சபித்து எழுதப்பட்டிருப்பதாக பரப்பன அக்ரஹார மத்திய சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
பிப்ரவரி 15ம் தேதி சிறையில் சரணடைந்த நாள் முதல் தற்போது வரை 'சசிகலா, மத்திய சிறைச்சாலை, பரப்பன அக்ரஹாரா, பெங்களூர் - 560100' என்ற முகவரிக்கு சசிகலாவுக்கு நூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்து குவிந்திருப்பதாகவும், அதில் அதிகமான கடிதங்கள் அவரை குற்றம்சாட்டியும், சபித்தும் எழுதப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சிறைக் கைதிகளுக்கு வரும் அனைத்துக் கடிதங்களையும் சிறைத் துறை அதிகாரிகள் படித்துப் பார்த்த பிறகே, கைதிகளிடம் ஒப்படைப்பது வழக்கம். அதுபோலத் தான் சசிகலாவுக்கு வரும் கடிதங்களையும் நாங்கள் படித்துப் பார்த்துக் கொடுக்கிறோம்.
கடிதங்களை இளவரசி படித்துப் பார்த்துவிட்டு மோசமாக இருக்கும் கடிதங்களை அவரே கிழித்துப் போட்டுவிடுவார். ஆரம்பத்தில் சசிகலா தனக்கு வரும் கடிதங்களை படித்து வந்தார். தற்போது படிப்பதை நிறுத்திவிட்டார் என்று சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் சேலம், தருமபுரி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்த இந்த கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில கடிதங்கள்தான் சென்னையில் இருந்து வந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.