தமிழ் - ஆங்கிலம் நீட் கேள்வித்தாள்களில் வேறுபாடுகள்: மறுதேர்வு கோரும் மாணவர்கள்!
நீட் தேர்வில் ஒவ்வொரு மொழி வினாத்தாள்களும் வேறுபட்டு இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக மாணவர்கள், மறு தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கோவை: நீட் தேர்வில் ஒவ்வொரு மொழி வினாத்தாள்களும் வேறுபட்டு இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழக மாணவர்கள், மறு தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த 7ம் தேதி நடைபெற்றது.
நீட் தேர்வெழுதிய மாணவர்கள் தேர்வு முடிந்த பிறகு, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் அளிக்கப்பட்ட வினாத்தாள்களில் வேறுபாடு இருப்பது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களின் வினாத்தாளில் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின்படியும், ஆங்கில வினாத்தாளில் சமச்சீர் வழிக்கல்வி பாடத்திட்டத்தின்படியும் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதை பார்த்ததும் அதிர்ந்தனர். வினாத்தாளில் 180 கேள்விகளும் மாறுபட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் பொதுத் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும், வினாத்தாள்கள் மாறுபட்டிருந்தால் இது எப்படி பொதுத் தேர்வு ஆகும் என்றும் கேள்வி எழுப்பினர்.
பல மாதங்களாக நீட் தேர்வுக்காக நாங்கள் எடுத்த பயிற்சிகள் வீணானது என்றும், ஆங்கில வினாத்தாள்கள் எளிதாக இருப்பதும், தமிழ் வினாத்தாள் கடினமாக இருப்பதும் மன வறுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், சிபிஎஸ்இ நிர்வாகம் மீது புகார் கொடுக்கவும் சில மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.