மதுரை மாநகர் காவல்துறையில் பணியாற்றும் பெண் சார்பு-ஆய்வாளர்கள் கைத்துப்பாக்கியுடன் இரவு ரோந்து செல்ல உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதால் அதை கையாள முறையான பயிற்சி பெறாத அவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
மதுரை மாநகரில், மதுரை மாநகர், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய 4 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. இங்கு பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த காவல்நிலையங்களில் ஆய்வாளர் மற்றும் 3 பெண் சார்பு-ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர். மாநகரக் காவல்நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சார்பு-ஆய்வாளர்கள் விடுப்பு எடுப்பது உள்ளிட்ட காரணங்களால் ஆள்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் பணியாற்றும் பெண் சார்பு-ஆய்வாளர்கள் மாற்றுப் பணியாக சட்டம்-ஒழுங்கையும் சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளது. இங்கு இரவு, பகல் ஓய்வின்றி நெருக்கடியான சூழலில் பணிபுரிய வேண்டியிருப்பதாக பெண் சார்பு-ஆய்வாளர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
"பெண் சார்பு-ஆய்வாளர்களுக்கு நீதிமன்றப் பணி, வழக்கு விசாரணை, இரவுப் பணி என தொடர்ந்து வேலைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இரவுப் பணியின்போது காவல்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணியின்போது கைத்துப்பாக்கியையும் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்வதற்கு பெண் சார்பு-ஆய்வாளர்கள் தயாராக உள்ளனர்.
ஆனால் அதை எப்படி கையாள்வது என்பது குறித்து முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை. பயிற்சி இன்றி வெறும் துப்பாக்கியை மட்டும் கொண்டு செல்வதால் எந்தப் பயனும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு காவலர்களாக பணியில் சேர்ந்தபோது சாதாரண துப்பாக்கி சுடும் பயிற்சி மட்டுமே அளிக்கப்பட்டது. தற்போது அந்த துப்பாக்கிகளை காவல்துறையில் பயன்படுத்துவது இல்லை.
பிஸ்டல், எஸ்எல்ஆர், இன்சாஸ் போன்ற நவீர ரக துப்பாக்கிகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ரோந்துப் பணியின்போது ஏதாவது விபரீதம் நேர்ந்தால் கூட நாங்கள் கொண்டு செல்லும் துப்பாக்கியை காட்டி எதிரிகளை மிரட்டத்தான் முடியுமே தவிர சுட முடியாது. காரணம் எங்களுக்குதான் பயிற்சி கொடுக்கப்படவில்லையே.
மேலும் இரவு ரோந்தின்போது இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து பணிபுரிய வேண்டியுள்ளது.
அப்போது இயற்கை உபாதைகளுக்குக்கூட மீண்டும் காவல்நிலையம்தான் வர வேண்டும். அதுபோன்ற நேரங்களில் உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால், நாங்கள் ரோந்தில் இல்லை என்று கூறி "மெமோ' கொடுத்து விடுகின்றனர்.
இரவுப் பணியின்போது சந்தேக வழக்குகள் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தால் அதற்கும் உயர் அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும். சில நேரங்களில் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. இதை தவிர்க்க, இரவு நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் அப்பாவி பயணிகள் மீது கூட சந்தேக வழக்குகள் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதுபோன்ற நேரங்களில் பொதுமக்கள் தொடரும் அவமதிப்பு வழக்குகளையும் நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. ஆதலால் கடுமையான மன அழுத்தத்தோடு பணிபுரிந்து வருகிறோம். இதனால் அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்படுகிறது.
எனவே கடும் பணிச்சுமையில் இருந்து பெண் சார்பு-ஆய்வாளர்களை விடுவிக்க வேண்டும்' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.