முகப்பு
தமிழ்நாடு

நாகர்கோவிலில் மரக்கடையில் தீ விபத்து: ரூ. 50 லட்சம் பொருள்கள் சேதம்

நாகர்கோவில், கோட்டாறில் உள்ள மரக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 50 லட்சம் மதிப்பிலான மரங்கள் மற்றும் மரச்சாமான்கள் தீயில் கருகின.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

நாகர்கோவில், கோட்டாறில் உள்ள மரக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 50 லட்சம் மதிப்பிலான மரங்கள் மற்றும் மரச்சாமான்கள் தீயில் கருகின.
கோட்டாறு வைத்தியநாதபுரம் பகுதியில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த செபாஸ்டின் (35) மரக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், பல வகை மரங்கள் மூலம் ஜன்னல், கதவு, பீரோ மேஜை போன்ற பொருள்களையும், பழைய மரச்சாமான்களை புதுப்பித்தும் கொடுக்கப்பட்டு வந்தன.
வழக்கம் போல் புதன்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு செபாஸ்டின் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். புதன்கிழமை அதிகாலையில், மரக்கடையிலிருந்து புகை வெளிவருவதாக செபாஸ்டினுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் வருவதற்குள் காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவியது. 
மாவட்ட அதிகாரி கல்யாண் குமார், நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையிலான தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடையில் இருந்த மரச் சாமான்களும் தீயில் எரிந்ததால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் கன்னியாகுமரி, தக்கலையிலிருந்து மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் உள்பட 5 வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
கரும்புகையால் மூச்சு திணறலுக்கு ஆளான அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, தங்களின் வீடுகளில் இருந்த விலை உயர்ந்த பொருள்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
கடை அருகே இருந்த மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கோட்டாறுபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மரங்கள் மற்றும் மரச்சாமான்கள் தீயில் கருகி சாம்பலாகின.
 

முழு கட்டுரையைப் படிக்க →