முகப்பு
தமிழ்நாடு

தபால்தலை சேகரிப்பை ஊக்கப்படுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: மத்திய அரசு முடிவு

தபால் தலை சேகரிப்பில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்து, 'தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' திட்டத்தின் கீழ், பரிசு, ரூ.6,000 வீதம் ஊக்கத் தொகை வழங்க மத்திய தகவல் தொடர்பு

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தபால் தலை சேகரிப்பில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்து, 'தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' திட்டத்தின் கீழ், பரிசு, ரூ.6,000 வீதம் ஊக்கத் தொகை வழங்க மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அறிவு சார்ந்த பொழுதுபோக்கு: தபால்தலை சேகரிப்பு என்பது அறிவுடன் நேரத்தைச் செலவிடும் நல்ல பொழுதுபோக்கு. பல்வேறு நாடுகளின் தபால் தலைகளைச் சேகரிக்கும்போது, அந்த நாடுகளின் கலாசாரம், மொழி, விலங்குகள், தாவரங்கள் உள்பட பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். எந்தத் துறை தொடர்பான தபால் தலைகளையும் சேகரிக்கலாம். தபால்தலை சேகரிப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல வயதினரும் விரும்புகின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் மத்தியில் தபால்தலை சேகரிப்பில் அதி தீவிர ஆர்வம் உள்ளது.
ஊக்கத் தொகை: தபால் தலை சேகரிப்பில் ஈடுபடும் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஊக்கத் தொகை வழங்க மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் முடிவு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
அதில் 'தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' திட்டத்தின் கீழ், பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசு மற்றும் ஊக்கத் தொகைக்காக நாடு முழுவதும் தபால்துறை மூலம் 920 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஒவ்வொரு தபால் துறை வட்டத்திலும் 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்கும் 10 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்படுவர். மொத்த ஊக்கத் தொகை ரூ.6000, காலாண்டுக்கு ஒரு முறை பிரித்து வழங்கப்படும். தேர்வு செயல்முறையில் தகுதி, நிபந்தனை ஆகியவற்றில் திருப்தியின் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்து ஊக்கத் தொகை வழங்கப்படும். 
ஊக்கத் தொகை ரூ.6,000: தமிழக தபால் வட்டத்தில் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் தகவல் அனுப்பப்படும். போட்டியில் பங்கேற்பவர் இந்தியாவுக்குள் அங்கீகாரம் பெற்ற பள்ளி மாணவராக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் பள்ளியில் தபால்தலை சேகரிப்பு கிளப் இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் கிளப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். பள்ளியில் தபால் சேகரிப்பு கிளப் இல்லாத பள்ளியில் மாணவருக்கு தபால்தலை சேகரிப்பு வைப்பு கணக்கு இருக்க வேண்டும். அந்த மாணவருக்கு நல்ல கல்விப் பதிவு இருக்க வேண்டும். அதேநேரத்தில், ஊக்கத்தொகைக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அல்லது சம அளவில் தரமதிப்பெண் இருக்க வேண்டும். இதில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்காக 5 சதவீத தளர்வு அளிக்கப்படும்.
தபால்தலை சேகரிப்பு கிளப் ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டும். இல்லாத பள்ளிகளில் தபால்தலை சேகரிப்பு கிளப் உருவாக்கி கொடுக்க தபால்தலை சேகரிப்பு ஆலோசகர் உதவி புரிவார்.
திட்டப் பணி, விநாடி-வினா மூலம் தேர்வு: தபால் தலை தொடர்பான திட்டப்பணி மதிப்பீடு மற்றும் விநாடி- வினா ஆகியவற்றின் மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் புகழ்பெற்ற மற்றும் முதுநிலை தபால்தலை சேகரிப்பாளர், தபால்துறை அதிகாரிகள் இடம் பெற்றிருப்பார்கள். இக் குழுவிடம் தபால்தலை தொடர்பான திட்டப் பணி அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் தேர்வு செய்து வெற்றியாளர்களைஅறிவிப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.