தமிழ்நாடு

பறவைகளுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு இல்லாமல் பசுமை தீபாவளி கொண்டாடும் கிராமம்!

DIN

பறவைகளின் இனப்பெருக்கத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளியை நாணல்குளம் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், கடையம் ஒன்றியம், வீராசமுத்திரம் அருகேயுள்ளது நாணல்குளம் கிராமம். வாகைக்குளம் நீர்நிலை கரையில் உள்ள இந்தக் கிராமத்தில் முழுமையும் விவசாயம்தான் தொழில். வாகைக்குளத்தில் அமைந்துள்ள கருவேல மரங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு வகையான பறவைகள் வந்து கூடுகட்டிக் குடியிருந்தன. இதுகுறித்த தகவலறிந்ததும் ஆய்வு செய்த சூழல் ஆய்வாளர்கள், ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஜனவரி வரை 4 மாதங்கள் பல்வேறு வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வலசை வருவதையும், அவை கூடு கட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதையும் அறிந்தனர். அந்த ஆய்வாளர்களுடன் சில நாள்களைக் கழித்த நாணல்குளம் கிராம இளைஞர்கள், பறவைகள் பற்றிய விவரங்களை அறிந்ததும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரும் தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதால் பறவைகள் கலைந்து செல்வதைக் கண்டனர்.
இதையடுத்து, ஊர்ப் பெரியவர்களிடம் கூறி, சுமார் 10 ஆண்டுகளாக நாணல்குளம் கிராமத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை நிறுத்திவிட்டனர். அதற்குப் பதிலாகப் பல்வேறு விளக்குகளை ஏற்றியும், அனைவரும் பல்வேறு உணவுப் பொருள்களைச் செய்து பிறருக்குக் கொடுத்தும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த ஆண்டும், நிகழாண்டும் மழையில்லாமல் குளத்தில் நீர் சேரவில்லை. இதனால் பறவைகள் வலசை வரவில்லை. ஆனாலும் நாணல் குளம் கிராம சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் பட்டாசுகளை வெடிக்காமல் பசுமை தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவர் மகேஷ் கூறும்போது, எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இங்கு யாருமே பட்டாசு வெடித்ததில்லை. மேலும், தண்ணீர் இல்லாததால் இரண்டு ஆண்டுகளாகப் பறவைகள் வரவில்லை. ஆனால், தண்ணீர் வந்ததும் எப்போது வேண்டுமானாலும் பறவைகள் வலசை வந்து இனப்பெருக்கம் செய்யலாம். நாங்கள் பட்டாசு வெடிப்பது அதன் வருகைக்கு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, தொடர்ந்து இனி வரும் காலங்களிலும் வெடியில்லாமல் பசுமைத் தீபாவளியைத்தான் கொண்டாடுவோம். மேலும், இக் கிராமத்தில் பல்லுயிர் பெருக்கக் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் வாகைக்குளத்தில் வரும் பறவைகளைப் பாதுகாக்க பறவைகள் சரணாலயம் அமைக்க வலியுறுத்தி வருகிறோம். இங்கு வரும் பறவைகளால் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற எண்ணம் இதுவரை வந்ததில்லை. அவற்றைக் காண்பதே பெருமகிழ்ச்சியாக உள்ளது. மேலும், எங்கள் கிராமத்தில் பத்து வயதுக்குள்பட்ட சிறுவர்கள் பட்டாசுகள் வெடிப்பதையே பார்த்ததில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT