சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் மீதான மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி பல மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் வசூலித்து கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் படத்தயாரிப்பாளர் மதன் கைது செய்யப்பட்டார்.
அவர் அந்த பணத்தை டி.ஆர்.பாரிவேந்தரிடம் கொடுத்ததாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, டி.ஆர்.பாரிவேந்தரும் கைது செய்யப்பட்டார்.நிபந்தனை ஜாமீன் கோரிய டி.ஆர்.பாரிவேந்தருக்கு அனுமதி வழங்கிய சைதாப்பேட்டை மாநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், ரூ85 கோடி பணத்தை உத்தரவாதமாகச் செலுத்த உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, ரூ.85 கோடியை பாரிவேந்தர் செலுத்தினார்.பின்னர் தன்மீது தொடரப்பட்டுள்ள மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி பாரிவேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாரிவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும், வழக்கை விரைவாக விசாரித்து, 8 வாரத்துக்குள் குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் பாரிவேந்தர் நீதிமன்றத்தில் செலுத்திய தொகையை பாதிக்கப்பட்ட 136 மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பிரித்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, டி.ஆர்.பாரிவேந்தர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் விசாரித்தனர்.
வழக்கு விசாரணைக்குப்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கில் புகார் அளித்த டாக்டர் கே.ஜெயச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பாரிவேந்தர் பணத்தை செலுத்தினால் வழக்கை ரத்து செய்வதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 136 பேர்களும் இதே நிபந்தனையில் வழக்கை ரத்து செய்ய ஒப்புக் கொள்ளும் வகையில், புகார் அளித்துள்ள அனைவரும் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த பிரமாண பத்திரங்களை ஆதாரமாகக் கொண்டு, டி.ஆர்.பாரிவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். புகார் அளித்தவர்கள் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்யும் வரை யாருக்கும் எந்தத் தொகையும் திரும்ப வழங்கக்கூடாது.உரிய நபர்கள் பணத்தைத் திரும்பப் பெறும் வகையில் உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு டி.ஆர்.பாரிவேந்தருக்கு மட்டும் செல்லுபடியாகும்.தொகையை திரும்ப அளிக்கும்போது டி.ஆர்.பாரிவேந்தர் தரப்பினரும் உடன் இருப்பர். மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி இந்த வழக்கில் நீதிமன்ற நடைமுறைகள் முடிவடைந்த நிலையில் இன்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் மீதான மோசடி வழக்கை ரத்து செய்து, அவரை வழக்கிலிருந்து விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.