ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு மிரட்டல்
தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு தினகரன் புதன்கிழமை அளித்த பேட்டி:
எங்கள் எம்.எல்.ஏ.-க்கள் மைசூரில் இருந்து என்னிடம் பேசினர். தமிழகத்திலிருந்து 5 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 30 போலீஸார் எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் விடுதிக்குச் சென்று முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், அதற்காக ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை பணம் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதியளித்துள்ளனர். மேலும் ஆதரவு அளிக்காவிட்டால் வழக்குப் போடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து, எங்கள் ஆதரவாளர்கள்அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளனர்.
இந்தப் பிரச்னை குறித்து நீதிமன்றத்தை நாடி, காவல் துறை மற்றும் அதற்கு பொறுப்பாக உள்ள முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோர உள்ளோம்.
நடிகர் செந்தில் என்னைச் சந்தித்துவிட்டு வெளியே வந்து அண்மையில் பேட்டி கொடுத்தார். இதற்காக அவர் மீதும், அவரை பேசத் தூண்டியதாக என் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். இந்தப் பிரச்னைகளை சட்டரீதியாக சந்திப்போம்.
ஆளுநர் மீது நம்பிக்கை: எங்களுக்கு 21 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏ.-க்கள் தேவை.
21 எம்.எல்.ஏ-க்கள் அவர்களிடம் இல்லை. முதல்வர் கூட்டிய எந்தக் கூட்டத்திலும் 21 பேரும் பங்கேற்கவில்லை.
கடந்த 7-ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்தோம். ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார். எனவே வியாழக்கிழமை வரை காத்திருப்போம். அதற்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதைத் தெரிவிப்போம்.
எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் பொதுக்குழு கூட்டத்துக்குச் சென்றுள்ளனர். கட்சியின் சட்டவிதிகளுக்கு ஏற்ப பொதுச் செயலாளரிடம் அனுமதி கோராமல் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட முடியாது.
எனவே, அந்தக் கூட்டத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். கட்சியைப் பாதுகாக்க எந்த முடிவுக்கும் செல்வேன்.
திமுக எங்களின் பிரதான எதிரி. எனவே, அவர்களுடன் நாங்கள் ஒருபோதும் செல்ல மாட்டோம். ஜக்கையன் எனது அனுமதியுடன்தான் பழனிசாமி அணிக்குச் சென்றார்.
கட்சியைக் காப்பாற்ற பொதுச் செயலாளரும், நானும் என்ன சொல்கிறோமோ அதை எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் செய்வார்கள் என்றார் டிடிவி தினகரன்.