தமிழ்நாடு

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது: எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை இல்லை

DIN

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில், மறு உத்தரவு வரும் வரை தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அக். 4-இல் மீண்டும் விசாரணை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களின் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் அக். 4-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
18 பேர் சார்பில் 18 மனுக்கள்: தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தகுதி நீக்க அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அடிப்படை முகாந்திரம் இல்லை: கட்சித் தாவல் தடைசட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் தங்களை தகுதி நீக்கம் செய்துள்ள பேரவைத் தலைவர் தனபாலின் நடவடிக்கை ஏற்புடையதல்ல. இது அரசியலமைப்புச் சட்ட ரீதியாக செல்லத்தக்கதல்ல.
தகுதி நீக்கம் செய்து விட்டால்...முதல்வரை மாற்றக் கோரிதான் ஆளுநரைச் சந்தித்தோமே தவிர கட்சிக்கோ , ஆட்சிக்கோ எதிராக எந்தக் கடிதமும் கொடுக்கவில்லை. தற்போதும் நாங்கள் அதிமுகவில்தான் இருக்கிறோம். தங்களை தகுதி நீக்கம் செய்து விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினால் அதன் மூலம் குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபித்து விடலாம் என்ற எண்ணத்தில் இந்த ஆட்சிக்கு ஆதரவாக பேரவைத் தலைவர் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். தகுதி நீக்கம் செய்து அரசிதழில் பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையையும் ரத்து செய்ய வேண்டும். அதுபோல பேரவைத் தலைவர் தங்களை தகுதி நீக்கம் செய்த உத்தரவுக்கும் தடை விதிக்கவேண்டும் என அந்த மனுக்களில் கோரியிருந்தனர்.
தி.மு.க. வழக்குடன் சேர்த்து... இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை நீதிபதி எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. இதே போன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடுமாறு கோரி திமுக தொடர்ந்து வழக்கும், டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்தொடர்ந்த வழக்கும் ஒன்றாகச் சேர்த்து விசாரிக்கப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் துஷ்யந்த் தவே உள்ளிட்டோர் முன் வைத்த வாதங்கள் குறித்த விவரம்:
மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே கூறியதாவது: பேரவைத் தலைவரின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது. மனுதாரர்கள் மீது கட்சித் தாவல் தடைச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் குறுக்கு வழியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கட்சிக்கு எதிராகச் செயல்படவில்லை. நடுநிலை மாறாமல் செயல்பட வேண்டிய பேரவைத் தலைவர் தனபால், ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்.
ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது... கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போதுகூட மனுதாரர்கள் இந்த அரசுக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த அரசுக்கு எதிராகச் செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், தற்போது இந்த 18 எம்.எல்.ஏ.க்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதம். இதை ரத்து செய்ய வேண்டும். எனவே, கட்சித் தாவல் தடைச்சட்டம் மனுதாரர்களுக்குப் பொருந்தாது.
கொறடா உத்தரவை மீறவில்லை: அரசு கொறடாவின் உத்தரவை மீறி மனுதாரர்கள் செயல்படவில்லை. முதல்வர் மீதுள்ள அதிருப்தி காரணமாகத்தான் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதற்காக பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்துள்ளார். வேறு சரியான காரணங்கள் எதுவும் மனுதாரர்கள் மீது கூறப்படவில்லை. நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சட்டப்பேரவைக் குழு ஆரம்ப கட்ட விசாரணையும் நடத்தவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை எந்த வகையிலும் பேரவைத் தலைவர் மீறக் கூடாது; ஆனால், இந்த 18 பேரின் தகுதி நீக்கத்தில் மீறப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையும் ரத்து செய்ய வேண்டும்.
பி.எஸ்.ராமன்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தகுதி நீக்கத்துக்குத் தடை விதிக்க வேண்டும். 
பேரவைத் தலைவர் ப.தனபால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம்: நடத்தை விதிகளின் அடிப்படையில்தான் 18 எம்.எல்.ஏ.க்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அரசிதழிலும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. எந்த விதத்திலும் விதிகள் மீறப்படவில்லை. சட்டப்படிதான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
திமுகவுடன், டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கைகோர்த்துச் செயல்படுகின்றனர் என்றார்.
துஷ்யந்த் தவே: நடுநிலையோடு செயல்பட வேண்டிய பேரவைத் தலைவரே முதல்வருடன் கைகோர்த்துச் செயல்படுகிறார்.
அரிமா சுந்தரம்: இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப் போதுமான அவகாசம் தேவை. எனவே வழக்கை வரும் 
அக். 5 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டாம். அதுவரை வேண்டுமென்றால் ஏற்கெனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று பிறப்பித்த உத்தரவை நீட்டித்துக் கொள்ளலாம். 
நீதிபதி எம்.துரைசாமி உத்தரவு: ''இந்த வழக்கில் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது. இந்த வழக்குத் தொடர்பாக தமிழக முதல்வர், பேரவைச் செயலாளர், அரசு கொறடா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடுகிறேன். வழக்கின் விசாரணை வரும் அக். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது'' என்றார்.

18 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தத் தடை

தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ-க்களின் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரும் வழக்கில் 18 பேரின் சார்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவேவின் வேண்டுகோளை நீதிபதி எம்.துரைசாமி ஏற்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார். ''தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதி காலியாக இருப்பதாக பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அறிவிப்பு வெளியிட்டால் 18 எம்.எல்.ஏ.க்களும் பாதிக்கப்படுவர் என்றார் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே.
இதைத் தொடர்ந்து, ''மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கான எந்த அறிவிப்பாணையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடாது'' என்று உத்தரவிட்டார் நீதிபதி எம்.துரைசாமி.
வாதிடக் குழுமிய பிரபல வழக்குரைஞர்கள்
டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித், பி.எஸ்.ராமன்.
சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் சார்பில் மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சார்பில் மூத்த வழக்குரைஞர் வைத்தியநாதன்.
தமிழக ஆளுநர் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி.
திமுக எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் கபில்சிபல், அமரேந்தர்சரண்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தரப்பில் சுப்ரமணிய பிரசாத் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT