முகப்பு
தமிழ்நாடு

கிடப்பில் போடப்பட்ட வகுப்பறை கையேடு திட்டம்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வகுப்பறை கையேடு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

பெரம்பலூர்: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வகுப்பறை கையேடு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், வகுப்பறை கால அட்டவணையில் மாற்றம் செய்து புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் முன்னோட்டமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டு அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், அடுத்தாண்டு முதல் மாநிலம் முழுவதும் நடைமுறைபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
இந்தத் திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய கால அட்டவணையை (டைம்டேபிள்) பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதை வகுப்பறை கையேடாக அச்சிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கியுள்ளது. 
இதில், திங்கள்கிழமை தோறும் காலை 9.10- 9.20 இறைவணக்கம், இதர நாள்களில் தியானம், 9.20- 10.50 நாள்தோறும் ஒரு பாடத்தில் குறுந்தேர்வு, 10.50- 11 இடைவேளை, 11- 12 பாடம் நடத்துதல், 12 - 12.20 எளிய உடற்பயிற்சி, 12.20 - 1 மதிய உணவு இடைவேளை, பிற்பகல் 1 -2 சொல்வதை எழுதுதல் மற்றும் செய்தித்தாள் வாசித்தல், 2 - 2.40 பாடம் நடத்துதல், 2.40- 2.50 இடைவேளை, 2.50- 3.30 மற்றும் 3.30- 4.10 உலகத்தரம் வாய்ந்த திரைப்படம், வினாடி- வினா, செயல்முறை அறிவியல், மன்ற செயல்பாடுகள் என கால அட்டவணை தயார் செய்து வழங்கப்பட்டுள்ளது. 
மேலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20 நிமிடங்கள் தாமதமாக தொடங்கி 20 நிமிடங்களுக்கு பிறகு முடித்துக் கொள்ளலாம். முதல் மற்றும் 3 -வது வாரத்தில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் தெரிதல், அறிதல், புரிதல், பயன்படுத்துதல், வினவுதல், திறனடைதல், புதியன படைத்தல் என்னும் அடிப்படையில், கற்றலின் பல்வேறு நிலைகளையும் மாணவர்கள் அடையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கால அட்டவணை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 
பெரம்பலூர் மாவட்டத்தில்: 
தமிழகத்திலேயே முதல்முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கண்ட கால அட்டவணை தயார் செய்யப்பட்டு அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தும் வகையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தை பெரம்பலூரில் நடத்தவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுத்து, அதற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது. 
மதிய உணவு இடைவேளை நேரம் குறைப்பு: புதிய வகுப்பறை கால அட்டவணையில் பாடம் நடத்தும் நேரமும், மதிய உணவு இடைவேளை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை மதியம் 12.40 முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளைக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த நடைமுறையை மாற்றி 80 நிமிடமாக இருந்த உணவு இடைவேளையை 40 நிமிடமாக குறைத்து கால அட்டவணையை பின்பற்ற கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நேரம் மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 
அரசுக்கு கோரிக்கை: குறிப்பாக, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் 40 நிமிடத்துக்குள் உணவு உட்கொள்ள முடியாமல், பாதி உணவோடு வகுப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களை உணவு உட்கொள்ள வைத்தப்பின், ஆசிரியர்களும் அவசரமாக உணவு உட்கொண்ட உடன் வகுப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, உணவு இடைவேளை நேரத்தை அதிகப்படுத்தவும், புதிதாக கொண்டுவரப்பட்ட வகுப்பறை கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளை மாற்ற வேண்டும் எனவும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆட்சியராக பணிபுரிந்த க. நந்தகுமார் செவிசாய்க்கவில்லை. 
ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்: இதையடுத்து, அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், மாநில அளவில் போராட்டம் நடத்தவும் ஆசிரியர் சங்கங்கள் முடிவெடுத்திருந்தன. இந்நிலையில், புதிய வகுப்பறை கையேட்டை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டிய ஆட்சியர் நந்தகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக வே. சாந்தா நியமிக்கப்பட்டார். 
பின்னர், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த வகுப்பறை கையேட்டில் குறிப்பிட்டுள்ளவாறு வகுப்புகளை நடத்த ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இதனால், புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட வகுப்பறை கையேடு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பெற்றோர்களிடமும், கல்வியாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்தில், நடைமுறை சிக்கல்களை களைந்து மாநிலம் முழுவதும் செயல்படுத்தினால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயரும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகும். 

முழு கட்டுரையைப் படிக்க →