முகப்பு
தமிழ்நாடு

தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட தரமணி பகுதியில் அதிகரிக்கும் கட்டடங்களால் அப்பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் புள்ளிமான்கள் உணவு, தண்ணீர் தட்டுப்பாட்டால் அழியும் நிலைக்குத்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:38 PM
தரமணியில் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதால் குப்பைமேட்டில் நாய்களுடன் உணவை பங்கிட்டுக் கொள்ளும் மான்.
பகிர்:

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட தரமணி பகுதியில் அதிகரிக்கும் கட்டடங்களால் அப்பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் புள்ளிமான்கள் உணவு, தண்ணீர் தட்டுப்பாட்டால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
சென்னை மாநரின் மத்தியப் பகுதியில் 270 ஹெக்டேர் பரப்பளவில் கிண்டி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. நாட்டிலேயே நகரின் பிரதானப் பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது தேசிய பூங்கா என்ற பெருமையும் இதற்கு உண்டு.
தாவரங்கள், வன விலங்குகள்: இந்த தேசிய பூங்கா உலர், வறண்ட பசுமை காடுகள், புதர்காடுகளைக் கொண்டதாகும். இதனால் இங்கு புள்ளிமான்கள் கூட்டமாக வசிக்கின்றன. கலைமான், நரி, கீரி போன்ற 14 வகை பாலூட்டி இனங்களும், 100 -க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், பாம்பு, தவளை உள்ளிட்ட ஊர்வன இனங்களும் இந்த இடத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளன.
குறைந்த வனப்பரப்பு: ஏற்கெனவே இந்தப் பகுதி 505 ஹெக்டேர் காப்புக் காடாக இருந்தது. ஐஐடி கல்வி நிறுவனம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா எனப் பல்வேறு திட்டப் பணிகளுக்காக இதில் சுமார் 172 ஹெக்டேர் பரப்பு கையகப்படுத்தப்பட்டன. எஞ்சிய 270 ஹெக்டேர் வனப் பகுதியை தேசிய பூங்காவாக 1976 -ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. வனவிலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கியதை அடுத்து உணவு, தண்ணீர் போன்றவற்றுக்காக அவை வெளியேறும் நிலை ஏற்பட்டது.
தொடரும் சோகம்: அவ்வாறு உணவு தேடி செல்லும்போது, வாகனங்களில் அடிபடுவதும், நாய்களால் கடிப்பட்டு இறப்பதும், பிளாஸ்டிக் பொருள்கள், கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் உயிரிழப்பைச் சந்திக்கும் மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2013 முதல் 2016 வரையில் மட்டும் 220 புள்ளி மான்கள் உயிரிழந்தன. இதேபோல் 8 கலைமான்களும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. 
உணவை தேடும் புள்ளிமான்கள்: ஐஐடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டதால், அங்கிருந்து வெளியேறிய மான்கள், கிண்டி தேசிய பூங்காவுக்குத் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கோட்டூர்புரம், காந்தி நகர், இந்திரா நகர், தரமணி, நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான புதர்மண்டிய பகுதிகளில் அவை வசிக்கத் தொடங்கின. இதில், தரமணியில் 30 -க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் வாழ்ந்து வந்த தனியாருக்குச் சொந்தமான சுமார் 27 ஏக்கர் நிலப் பகுதி கட்டடம் கட்டுவதற்காக அண்மையில் அகற்றப்பட்டது. இதனால், அங்கு வசித்த புள்ளிமான்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:
தரமணி பகுதியில் சுற்றித் திரியும் மான்களுக்கு சிலர் இட்லி உள்ளிட்ட உணவுகளைத் தருகின்றனர். மேலும், அப்பகுதியில் இயங்கும் உணவகங்களில் இருந்து கொட்டப்படும் உணவுகளை பிளாஸ்டிக் தாளுடன் சேர்த்து மான்கள் உண்கின்றன. இதனால், அவற்றுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த மான்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் வனத்துறை அதிகாரிகள் இப்போதாவது ஈடுபட வேண்டும் என்றனர்.
புள்ளிமான்களைப் பிடிக்க நடவடிக்கை: இதுகுறித்து வனச்சரகர் முருகேசன் கூறும்போது, 'தரமணி பகுதியில் தனியார் நிலப்பகுதியில் புள்ளிமான்கள் வசித்து வந்த இடம் தற்போது சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசித்த 30 -க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் உணவு, தண்ணீருக்காக சாலைக்கு வரத் தொடங்கின. 
மான்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதைத் தடுப்பதற்காக வனத் துறை சார்பில் அவற்றுக்கு தண்ணீரும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மான்கள் அனைத்தும் விரைவில் பிடிக்கப்பட்டு கிண்டி தேசிய பூங்கா அல்லது வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விடப்படும்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.