தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் நலனைப் பாதுகாக்க சிறப்புத் திட்டங்கள்: தில்லி கூட்டத்தில் அமைச்சர் சரோஜா பெருமிதம்
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் நலன்களைப் பாதுகாக்க பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தில்லியில் நடைபெற்ற ஊட்டச்சத்து குறைபாடு சவால்கள் குறித்த தேசிய
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் நலன்களைப் பாதுகாக்க பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தில்லியில் நடைபெற்ற ஊட்டச்சத்து குறைபாடு சவால்கள் குறித்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் மாநில சமூக நலத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் சார்பில் போஷான் அபியானின் 'இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்கள் மீதான தேசியக் கவுன்சிலின்' முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர் வி.சரோஜா பங்கேற்றுப் பேசியதாவது:
இந்தியாவில் அதிக எழுத்தறிவு, நல்ல மனித வளர்ச்சி குறியீடுடன் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், கல்வி, சுகாதாரம், ஊட்டத்து ஆகிய துறைகளில் முன்னிலை மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து வருகிறது. மாநிலத்தில் 32 மாவட்டங்களில் 434 திட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் (ஐசிடிஎஸ்) மூலம் 54,439 அங்கன்வாடி மையங்களில் 35 லட்சம் பயனாளிகள் நேரடியாகப் பயன்பெற்று வருகின்றனர். ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பள்ளிகளில் செயல்பட்டு வரும் 43,143 மதிய உணவு மையங்கள் மூலம் 54 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
'தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013' விதிகளைப் பின்பற்றி பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களில் சோதனை அடிப்படையில் இரண்டரை வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பால் வழங்கப்படுகிறது. இது போன்ற திட்டங்களுக்காக குழந்தைகள், பெண்கள், வளரிளம் பெண்கள் ஆகியோரின் சுகாதாரத்தைக் கவனத்தில் கொண்டு கூடுதலாக ரூ.200 கோடியை மாநில அரசு செலவிட்டு வருகிறது. மேலும், குழந்தைகளுக்கு பாதுகாப்பாக தாய்ப்பால் புகட்டும் வகையில் மாநிலத்தில் 352 பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்காக பிரத்யேக அறைகளை தமிழக அரசு அமைத்துள்ளது. எட்டு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் திண்டுக்கல் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. முதல்வர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தொலைநோக்குத் தலைவர்கள் மூலம் தமிழகம் ஒரு நவீன நல மாநிலம் அந்தஸ்தை எட்டியுள்ளது.
மதிய உணவுத் திட்டத்தை முன்பு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தொடங்கினார். இத்திட்டத்தில் கல்வியும், ஊட்டச்சத்தும் உறுதிப்படுத்தப்பட்டது. அதேபோன்று, முதல்வராக ஜெயலலிதா இருந்த போது ' தொட்டில் குழந்தை திட்டம்' தொடங்கப்பட்டது. இத்திட்டமானது பெண் சிசுக்கொலை பிரச்னைக்கு தீர்வாக இருந்ததுடன் தமிழகத்தை உலகமே உற்று நோக்கச் செய்தது. அதேபோன்று, குறைந்த விலையில் சத்தான பல்வகை உணவு வழங்கும் 'அம்மா உணவகம்' ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.
தொட்டில் குழந்தைத் திட்டம், பெண்கள் எழுத்தறிவுத் திட்டம், 24 மணிநேர மகப்பேறு கவனிப்பு, இலவச சானிட்டரி நாப்கின், பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் 13 அம்சத் திட்டங்கள், திருமணத்திற்கு தங்கம், நிதி உதவி வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசுடன் தமிழக அரசும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என்றார் அமைச்சர் வி.சரோஜா.
இக்கூட்டத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஆர்.கண்ணன் கலந்து கொண்டார். இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் சரோஜா பேசுகையில், '14 வயது முதல் 18 வயதுக்கு கீழ் வரை உள்ள குழந்தைகளுக்கு ரத்த சோகை இருக்கக் கூடாது எனும் நோக்கில் தமிழக அரசு 'சபலா' திட்டத்தை செயல்படுத்தி வந்தது. தற்போது அந்த வயது வரம்பை 11-14 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.
குறைந்த எடையுள்ள குழந்தைகள், உயரம் குறைவாக உள்ள குழந்தைகள், ரத்த சோகை உள்ள குழந்தைகளின் விகிதாசாரத்தைக் குறைக்க வேண்டும் என்பதுதான் தேசியக் கவுன்சில் கூட்டத்தின் நோக்கம். ஊட்டச்சத்து குறை இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்குடன் இக்கூட்டம் நடத்தப்பட்டது' என்றார்.