தமிழ்நாடு

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழக அரசின் அரசாணை ரத்து

DIN

முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் சேர சலுகை மதிப்பெண் வழங்குவதற்காக தொலைதூரப் பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.
அரசு மருத்துவர்கள் முதுநிலை டிப்ளமோ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு கோரும் மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அரசாணை ரத்து: முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர தொலைதூர பகுதிகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி, 10 முதல் 30 சதவீதம் சலுகை மதிப்பெண் வழங்கப்படுகிறது. 2018-2019-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் வகையில், தொலைதூரப் பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி தமிழக அரசு மார்ச் 23-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பிரவீண் உள்ளிட்ட 4 மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் புவியியல் அமைப்பின் அடிப்படையில் எளிதில் சென்றடைய இயலாத பகுதிகளைத்தான் எளிதில் அணுக முடியாத பகுதிகள், தொலைதூரப் பகுதிகள் என்று வகைப்படுத்த வேண்டுமே தவிர, மருத்துவர்களின் எண்ணிக்கை மற்றும் காலியிடங்களின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தக்கூடாது. தமிழக அரசின் இந்த அரசாணையால் நகர்ப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. 
ரத்து செய்தது ஏன்?: வழக்கை விசாரித்த நீதிபதி, 'இந்த அரசாணையின்படி, தொலைதூரப் பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகள் மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதிகள் புவியியல் அடிப்படையில் வகைப்படுத்தப்படவில்லை. இதன் மூலம் நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்குத்தான் அதிக பயன் கிடைக்கும். தகுதியுள்ளவர்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்காது. எனவே, இந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார். 
50 சதவீத இடஒதுக்கீடு மனு தள்ளுபடி: இதே போல் முதுநிலை டிப்ளமோ படிப்பில் மருத்துவ மேற்படிப்பில் சேருவதற்கு தொலைதூர மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் அளித்து, அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு மருத்துவர் சுதன் உள்ளிட்ட 7 பேர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். எளிதில் மக்கள் அணுக முடியாத பகுதிகளில் மருத்துவப் பணியாற்றி வருகிறோம். எனவே, எங்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. 
வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என விதிகளில் தெளிவாக உள்ளது. 
மனுதாரர்கள் கோரும் கூடுதல் மதிப்பெண் முறை என்பது மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு மட்டுமே பொருந்தும். எனவே, மனுதாரர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு கோர முடியாது என உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT