முகப்பு
தமிழ்நாடு

அரசு வழக்குரைஞர் நியமனத்தில் அரசியல் இருக்கக்கூடாது

அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் அரசியல் இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் அரசியல் இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் வசந்தகுமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அரசு தரப்பில் ஆஜராக வழக்குரைஞர்களை நியமித்து கடந்த 2017 - ஆம் ஆண்டு ஏப்ரல் 24 -ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அரசு வழக்குரைஞர் நியமனம் தொடர்பான விதிகளை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. பிரிஜேஸ்வரர் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், புதிய விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தகுதி வாய்ந்த நபர்களை அரசு வழக்குரைஞர் பதவிகளில் நியமிக்க வேண்டும். அந்த நியமனம் ஒருதலைபட்சமாக இருக்கக் கூடாது' என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு உருவாக்கியுள்ள விதிகளின்படி, 'அரசு வழக்குரைஞர் பணிக்கு விண்ணப்பிக்கும் வழக்குரைஞர்களில் திறமையானவர்களைத் தேர்வு செய்து, தேர்வுக் குழுவுக்கு அரசு தலைமை வழக்குரைஞர் பரிந்துரை செய்வார். அந்தத் தேர்வுக் குழுவில் உள்துறைச் செயலாளர், சட்டத் துறை செயலாளர், அரசு தலைமை வழக்குரைஞர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவே அரசு வழக்குரைஞர் பதவிக்கான தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்யும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு திறமையான வழக்குரைஞர்களை நியமித்தால்தான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர முடியும். நீதிமன்றங்களில் சிறந்த தீர்ப்புகள் வெளிவர அந்த வழக்கில் ஆஜராகும் திறமையான வழக்குரைஞர்களின் உதவியும் அவசியமாகும்.
எனவே, அரசு வழக்குரைஞர்கள் நியமனத்தில் எந்தக் காரணம் கொண்டும் அரசியல் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் அந்தப் பதவியை தங்களுக்குத் தான் தர வேண்டும் என யாரும் உரிமை கோர முடியாது. அதே வேளையில் தகுதியான வழக்குரைஞர்களை அந்தப் பதவிகளுக்கு பரிசீலிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் அரசு வழக்குரைஞர் பதவிகளுக்கு திறமையானவர்களை நியமிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். மேலும் அரசு வழக்குரைஞர் பதவிக்கான தேர்வு தொடர்பான அறிவிப்பை அனைத்து வழக்குரைஞர்களும் அறிந்து கொள்ளும் வகையில், அதற்கான அறிவிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞர் சங்கங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →