தமிழ்நாடு

அரசுப் பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத உள் ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு

DIN

சிறந்த விளையாட்டு வீரர்களுக்குத் தகுதி அடிப்படையில் 2 சதவீதம் வரை உள்ஒதுக்கீடாக அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்ற புதன்கிழமை வந்த முதல்வரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார்.
தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர் எஸ்.டி.உபசானி, கடற்படை பொறுப்பு அதிகாரி (தமிழகம்-புதுச்சேரி) வித்யான்சு ஸ்ரீவத்சா, விமானப்படை அதிகாரி எம்.எஸ்.அவானா, கிழக்கு மண்டல கடலோரக் காவல்படைத் தலைவர் எஸ்.பரமேஷ், காவல் துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் விஜய்குமார், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் ஆகியோரை முதல்வருக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா அறிமுகம் செய்து வைத்தார்.
காவல் துறையின் அணி வகுப்பை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியது: 
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு... தமிழகத்தில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும், தேசிய அளவிலான முதுநிலைப் போட்டிகள், தமிழக அளவிலான போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்றாலோ, தமிழகம் சார்பாக கலந்து கொண்டால்கூட அவர்களுக்கு அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட பதவிகளில் தகுதியின் அடிப்படையில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடாக வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: தமிழகத்தின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டு இது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாலும், அவரைத் தொடர்ந்து அவரின் அரசின் சட்டப் போராட்டத்தாலும் காவிரி விவகாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. அதிக மழையால் மேட்டூர் அணை இரண்டு முறை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 
குடிமராமத்துத் திட்டம்: ஏரிகள், கால்வாய்கள், அணைகளில் படிந்துள்ள களிமண், வண்டல், சவுடு, சரளை மண்ணை மண்பாண்டத் தொழிலாளர்கள், விவசாயிகளுக்குக் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் மூலம், 6.52 கோடி கனமீட்டர் வண்டல் படிவுகள், 5.83 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பொது விநியோகத் திட்டம்: ஜூலை மாத இறுதி வரை 1.97 கோடி புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒத்துழைப்பு தேவை: வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை வெற்றிகரமாகச் செயல்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.
குடிசைகளற்ற தமிழகம்: நிகழாண்டில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ், 1.30 லட்சம் வீடுகளும், முதல்வரின் சூரிய ஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 20,000 வீடுகளும் கட்டப்படும். அனைவருக்கும் வீட்டுவசதி என்ற பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், நகர்ப்புறங்களில் 4 லட்சத்து 25 ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மென்பொருள் ஏற்றுமதி: தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதியானது ரூ.1.11 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் எனவும், மென்பொருள் வல்லுநர்களின் எண்ணிக்கை 6.38 லட்சமாக இருக்கும்.
சட்டம்-ஒழுங்குக்கு முக்கியத்துவம்: தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டுமெனில் பொது அமைதி நிலவ வேண்டும். தமிழக அரசு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்புக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. எந்தவித குறுக்கீடும் இன்றி, காவல் துறையினர் சுதந்திரமாக, தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நவீன வசதிகள் செய்து தரப்ப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் வழங்குவதை எளிமையாக்குவதன் ஒருபகுதியாக ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச்சாளர தகவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11 அரசுத் துறைகளில் இருந்து தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு அனுமதிகள் பெறுதல் புதுப்பித்தல் ஆகிய சேவைகளைப் பெற முடியும் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
தலைமைச் செயலக வளாகத்தில் இருந்த மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு முதல்வர் இனிப்பு வழங்கினார்.
பங்கேற்றோர்: மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, பேரவைத் தலைவர் பி.தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இரண்டாவது ஆண்டு: முதல்வராகப் பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டாக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார், எடப்பாடி கே.பழனிசாமி. சாரல் மழைக்கு இடையே சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

தியாகிகளுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு
தியாகிகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை:
நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தியாகிகளைச் சிறப்பிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.13,000-த்திலிருந்து ரூ.15,000-மாக உயர்த்தப்படும். அவர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஓய்வூதியம் ஆகியன ரூ.6,500-லிருந்து ரூ.7,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார் முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT