தமிழ்நாடு

சுயநலமின்றி பணியாற்ற திரண்டு வாருங்கள் இளைஞர்களுக்கு ஆளுநர் புரோஹித் அழைப்பு

தினமணி

பாரதியார் போன்று நாட்டுக்கு சுயநலமின்றி பணியாற்ற இளைஞர்கள் அதிகளவில் முன்வர வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தினார்.
பாரதியாரின் 136-ஆவது பிறந்தநாளையொட்டி வானவில் பண்பாட்டு மையம் , தமிழ் வளர்ச்சித்துறை ஆகியன சார்பில் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள "பாரதி திருவிழா' சென்னை கலைவாணர் அரங்கத்தில் சனிக்கிழமை தொடங்கியது. விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்து சிறப்பான பங்களிப்புகளை கலை வடிவில் கொடுத்ததற்காக திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு பாரதி விருதினை வழங்கினார். இதையடுத்து, 52 சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை எடுத்துக்கூறும் "வீர சுதந்திரம்' என்ற தலைப்பிலான கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்துப் பேசியது:
கவிஞர், பெண்ணுரிமை போராளி, அறிஞர், பல்வேறு மொழிகளில் புலமை என பன்முகதன்மை கொண்டவர் பாரதியார். அவரது கவிதைகள் முற்போக்கான சீர்த்திருத்த லட்சியங்களை வெளிப்படுத்துவதாக இருந்தது. பாரதி தமது வீர 
வசனங்கள் மூலம் பல்வேறு சூழல்களில் நவீன தமிழ் கவிஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். அவரை கௌரவப்படுத்தும் விழாக்கள் தேசப்பற்று விதையை இளைஞர்கள் மனதில் விதைத்து, அர்ப்பணிப்போடு நாட்டை மேம்படுத்துவதற்கான பணியில் ஈடுபடுத்துவதற்கு உதவும். 
சுயநலம் இல்லாமல் நாட்டின் பெருமைகளை பறைசாற்றவும், சேவை செய்யவும் இளைஞர்கள் அதிகளவில் வரவேண்டும். இதுபோன்ற விழாக்கள் தேசப்பற்று உணர்வை லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில் சுடர்விடுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ: பாரதிக்கு பெருமை சேர்க்கும் விழாவில் கலந்து கொள்வது நமக்குதான் பெருமை. இந்தியாவின் புதுமைப் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் அமைத்தவர் பாரதி. இன்னும் எத்தனை ஆயிரம் காலம் ஆண்டுகள் வந்தாலும் பாரதியாரின் புகழ் மங்காது, மீண்டும் மலர்ந்து கொண்டே இருக்கும். பாரதியார் மீது மரியாதை கொண்டுள்ள தமிழக அரசு, அவருக்கு பல்வேறு வகைகளில் சிறப்புச் சேர்த்து வருகிறது என்றார். 
முன்னதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் வானவில் பண்பாட்டு மையத்தின் புரவலரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள், மூத்த வழக்குரைஞர் இரா.காந்தி, பத்திரிகையாளர் மாலன், தொழிலதிபர் நல்லிகுப்புசாமி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் எம்.முரளி, திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், எழுத்தாளர் சிவசங்கரி, வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் வழக்குரைஞர் கே. ரவி, பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவையொட்டி பள்ளி மாணவர்கள் 108 பேர் பாரதியார் வேடம் அணிந்து விழா அரங்குக்கு ஊர்வலமாக வந்தனர்.
"பாரதி திரையரங்கம்'
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் "வீர சுதந்திரம்' எனும் தலைப்பிலான கண்காட்சியில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் பாரதி திரையரங்கம் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சி அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ஒளி வில்லைப் படக்காட்சி (slide show), ஒளி- ஒலி படக்காட்சி (sound and light), பரிமாணக் குறும்படம் (infographics film) என நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட சிறு, சிறு அறைகள் உள்ளன. அவற்றில் விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த வாழ்க்கை வரலாறு, ஆவணப்படங்கள், அசல் புகைப்படங்கள் நவீன தொழில்நுட்பத்தில் காட்சியமைப்பில் இடம்பெற்றுள்ளன. இவை குழந்தைகள் உள்ளிட்ட பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. 
அதேபோன்று அரங்கில் உள்ள பாரதி திரையரங்கில் "வீரபாண்டிய கட்டபொம்மன்' போன்ற தேசப்பற்று மிகுந்த திரைப்படங்களின் முக்கியக் காட்சிகள் திரையிடப்படுகின்றன. இங்கு பார்வையாளர்கள் அமருவதற்காக 50-க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இவை தவிர பள்ளி, கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த பாரதியார் சிலைகள், புகைப்படங்கள், சின்னங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. விழாவையொட்டி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கவிதைப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT