தமிழ்நாடு

"பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தோருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பது ஏற்புடையதல்ல'

DIN

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்ற கருத்து ஏற்புடையதல்ல என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்.முருகன் தெரிவித்தார்.
 சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கக் கட்டடத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கோ.அருணாசலம் எழுதிய "தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் வரலாறும், வளர்ச்சியும்' என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில் என்.முருகன் நூலை வெளியிட மோகன் புருவரீஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.நந்தகோபால் பெற்றுக் கொண்டார். விழாவில் என்.முருகன் பேசியது:
 இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இடஒதுக்கீட்டுக்கான பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பலரின் அயராத உழைப்பினால் பெறப்பட்ட இடஒதுக்கீட்டை நாம் அனுபவித்து வருகிறோம். இடஒதுக்கீட்டுக்கான போராட்டம், அதன் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு "தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் வரலாறும், வளர்ச்சியும்' நூல் பெரும் உதவிகரமாகவும், ஆவணமாகவும் இருக்கும்.
 பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்ற கருத்து எழத் தொடங்கி உள்ளது. சில பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரம், கல்வியில் முன்னேறி இருந்தாலும், சமூக கட்டமைப்பில் இன்றளவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இந்த நிலை குறிப்பாக தமிழகத்தில்தான் அதிக அளவில் உள்ளது. எனவே, வசதி படைத்த பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கூடாது என்ற கருத்து ஏற்புடையதல்ல. அதேபோல், சமூகத்தில் அடிப்படையில் இருந்து மாற்றம் வந்தால்தான் ஜாதி ஒழியும் என்றார்.
 விழாவில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் ஆர்.வெங்கடேசன், டாக்டர் எஸ்.வைத்தியநாதன், திருப்பூர் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி, அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் கோ.அருணாசலம் ஏற்புரையாற்றினார். இதில், டான்ஸ்டியா முன்னாள் தலைவர் ஆ.சண்முகவேலாயுதன், அ.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT