முகப்பு
தமிழ்நாடு

அரசியலில் பிரபல நடிகர்களை நம்பி விடாதீர்கள்: யாரைச் சொல்கிறார் சத்யராஜ்? 

அரசியலில் பிரபல நடிகர்களை நம்பி விடாதீர்கள் என்று சென்னையில் நடந்த நிகழ்வு  ஒன்றில் நடிகர் சத்யராஜ் பேசியிருப்பது புதிய சர்ச்சையினை உண்டாக்கியிருக்கிறது.

Updated On : 18 பிப்ரவரி, 2018 at 6:01 PM
பகிர்:

சென்னை: அரசியலில் பிரபல நடிகர்களை நம்பி விடாதீர்கள் என்று சென்னையில் நடந்த நிகழ்வு  ஒன்றில் நடிகர் சத்யராஜ் பேசியிருப்பது புதிய சர்ச்சையினை உண்டாக்கியிருக்கிறது.

சுப.வீரபாண்டியன் தலைவராக உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பு நடத்திய சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா சைதாப்பேட்டையில் சனிக்கிழமை நடந்தது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜூம் கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் பேசியதுதான் தற்பொழுது சர்ச்சையினை உண்டாக்கியிருக்கிறது. அவர் பேசியதாவது:-

Advertisement

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது இப்போது அன்றாட செய்தியாகி விட்டது. நடிகர்களுக்கு என்ன பிரச்சினையிருக்கிறது? ஒரு பிரச்சினையும் இல்லை. தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்து இருக்கிறார்கள். ஏன், நானே மூன்று தலைமுறைக்கு காணும் அளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிரபல நடிகர்கள் என்பதாலாயே அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று ஒரு போதும் நம்பி விடாதீர்கள். அவ்வாறு நீங்கள் நினைப்பது தவறு. நடிகர்கள் அரசியலில் தோற்றால் அது பெரிய தோல்வி அல்ல.

ஆனால் அவர்கள் வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசியுங்கள். எனவே நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும்.

இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தங்களது அரசியல் பிரவேசத்தினை அறிவித்துள்ள நிலையில், அரசியலில் பிரபல நடிகர்களை நம்பி விடாதீர்கள் என்று நடிகர் சத்யராஜ் நிகழ்வு ஒன்றில் பேசியிருப்பது சர்ச்சையினை உண்டாக்கியிருக்கிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.