முகப்பு
தமிழ்நாடு

ரஜினி, கமலை சினிமாக்காரர்கள் என்று ஒதுக்கி விடாதீர்கள்: பார்த்திபன் கொடுக்கும் ஆதரவு 'வாய்ஸ்'!

அரசியலில் ஈடுபட உள்ள ரஜினி, கமலை சினிமாக்காரர்கள் என்று ஒதுக்கி விடாதீர்கள் என்று நடிகர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 19 பிப்ரவரி, 2018 at 3:24 PM
பகிர்:

ஈரோடு: அரசியலில் ஈடுபட உள்ள ரஜினி, கமலை சினிமாக்காரர்கள் என்று ஒதுக்கி விடாதீர்கள் என்று நடிகர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுப.வீரபாண்டியன் தலைவராக உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை என்னும் அமைப்பு நடத்திய சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா சைதாப்பேட்டையில் சனிக்கிழமை நடந்தது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜூம் கலந்து கொண்டார். நிகழ்வில் அவர் பேசும் பொழுது, 'நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது இப்போது அன்றாட செய்தியாகி விட்டது. நடிகர்களுக்கு என்ன பிரச்சினையிருக்கிறது? பிரபல நடிகர்கள் என்பதாலாயே அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்று ஒரு போதும் நம்பி விடாதீர்கள். அவ்வாறு நீங்கள் நினைப்பது தவறு. நடிகர்கள் அரசியலில் தோற்றால் அது பெரிய தோல்வி அல்ல. ஆனால் அவர்கள் வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசியுங்கள். எனவே நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும்.' என்று பேசியிருந்தார்.

Advertisement

நடிகர்கள் ரஜினியும் கமலும் தங்களது அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்திருந்த நிலையில் சத்யராஜின் இந்த பேச்சு மிகுந்த சர்ச்சையினை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஈரோட்டில் பிரபல சினிமா படத் தயாரிப்பாளர் 'அம்மா கிரியேஷன்ஸ்' சிவா இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்கள்.  

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் ரஜினியும், கமலும் நேரில் சந்தித்து பேசி இருப்பது உண்மையில் அவர்களின் ஆரோக்கிய அரசியலை காட்டுகிறது. அவர்களை சினிமாக்காரர்கள் என்று யாரும் எண்ணி ஒதுக்கி விடக்கூடாது.

அவர்கள் நடித்து சம்பாதித்து சேர்த்த பணம் எல்லாம் மக்கள் கொடுத்தது. அந்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதனால்தான் அவர்கள் அரசியலுக்கு வந்துள்ளார்கள்.

எனவே அவர்களை நம்பலாம். அதற்காக இன்னாருக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்லமாட்டேன். என்னுடைய ஆதரவு யாருக்கு எனவும் நான் இப்போது சொல்ல மாட்டேன். தேர்தல் சமயத்தில் அதை தெரிவிப்பேன்.

இவ்வாறு நடிகர் பார்த்திபன் பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.