சென்னை, சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்து 11 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளி, ஆந்திர மாநிலத்தில் சிபிஐ சிறப்பு குற்றப் பிரிவு அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சென்னை, சேத்துப்பட்டு எம்.வி. நாயுடு தெருவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாநில தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த 1993 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 -ஆம் தேதி சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். கட்டடத்தின் பெரும்பகுதியும்சேதமடைந்தது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தமிழக காவல் துறையின் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. வழக்கில் இமாம் அலி, பழனி பாபா உள்ளிட்ட 18 பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்கள் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டம், தடா சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சிபிஐ சிறப்பு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள், பிடிப்பட்டவர்கள் மீது சென்னை தடா நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின்போது 224 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போதே பழனி பாபா 1997 -ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அதேபோல், போலீஸ் காவலில் இருந்து தப்பியோடிய இமாம் அலி, 2002 செப்டம்பர் மாதம் பெங்களூரில் போலீஸாரின் என்கவுன்ட்டரில் இறந்தார். வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட வேலூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த முஷ்டாக் அகமது (56) தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.
24 ஆண்டுகள் தலைமறைவு: இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த சென்னை தடா நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய 11 பேருக்கு தண்டனை அளித்து கடந்த 2007 -ஆம் ஆண்டு ஜூன் 21 -ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இவர்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 4 பேர் அப்போது வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, தலைமறைவாக இருந்த முஷ்டாக் அகமதுவை விரைவில் கைது செய்யும்படி நீதிமன்றம் அண்மையில் சிபிஐக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து சிபிஐ, தலைமறைவாக இருந்த முஷ்டாக் அகமதுவை பற்றி தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில் முஷ்டாக் அகமது, ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவில் தலைமறைவாக இருப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து ரேணிகுண்டாவில் தலைமறைவாக இருந்த முஷ்டாக் அகமதுவை சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சுற்றி வளைத்து கைது செய்தனர். உடனடியாக அவர், சென்னை அழைத்து வரப்பட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிபிஐ தகவல்: இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்படாமல், 24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முஷ்டாக் அகமது கைது செய்யப்பட்டதன் மூலம் வழக்கில் எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.