தமிழ்நாடு

தாமிரவருணியில் புஷ்கரத் திருவிழா: மடாதிபதிகளுடன் விஜயேந்திரர் ஆலோசனை

DIN

தாமிரவருணியில் புஷ்கரம் நடத்துவது குறித்து பல்வேறு ஆதீனகர்த்தர்களுடன் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரர் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். 
திருநெல்வேலி குறுக்குத்துறையில் 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரவருணி புஷ்கரம் திருவிழா வரும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
இதில், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய ஸ்வாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் காசிவாசி முத்துக்குமார சுவாமிகள் உள்ளிட்டோர் ஆசியுடனும், முன்னிலையிலும் அக்டோபர் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் புஷ்கரம் திருவிழா தொடங்கவுள்ளது. 
தொடர்ந்து, நாள்தோறும் பூஜைகள், ஹோமம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, தாமிரவருரணி நதியில் பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்காக தாமிரவருணி அன்னை சிலை செய்யப்படவுள்ளது. இதற்கான, சிலை வடிக்கும் பணிகளை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி விஜயேந்திரர் தொடங்கி வைத்தார். 
இந்நிலையில், புஷ்கர விழாவை விமரிசையாக நடத்துவது குறித்து, பீடாதிபதி விஜயேந்திரர் முன்னிலையில், தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் காஞ்சிபுரம் கிளை மடம் தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீன இளைய பட்டம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம், தாமிரபரணி புஷ்கர ஏற்பாட்டாளர் மகாலட்சுமி சுப்பிரமணியம் உள்ளிட்ட பிரதிநிதிகளோடு திங்கள்கிழமை கலந்தாலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, தருமபுரம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியது: 
வட இந்தியாவில் கும்பமேளா கொண்டாடுவது போல், தாமிரவருணி ஆற்றில் தாமிரவருணி புஷ்கரம் விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. இதற்கு முன்பு மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் கொண்டாடப்பட்டது. அதேபோல், 144 ஆண்டுக்கு ஒருமுறை விருச்சிக ராசியில் குருபகவான் சேரும் நேரத்தில் வற்றாத தாமிரவருணி தீர்த்தத்தில் நீராட வேண்டும். இதற்கென, வரும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தொடர்ந்து 12 நாள்கள் விழா நடைபெறும். காவிரி புஷ்கர நிறைவு விழா செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை நடத்தி விட்டு, தாமிரவருணி புஷ்கர விழா நடத்த வேண்டும். இதுகுறித்து, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரர், தருமை, திருப்பனந்தாள், திருவாவடுதுறை, கோவை காமாட்சிபுரி உள்ளிட்ட ஆதீனங்களுடன் கலந்து ஆலோசித்தோம். 
அவ்வகையில், திருநெல்வேலி குறுக்குத்துறையில் விமரிசையாக விழாக்கள் நடைபெறவுள்ளன. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த புஷ்கரத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் உள்ளிட்ட அனைத்து ராசிக்காரர்களும் நீராடினால் கர்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட காரியங்கள் செய்யாமல் இருப்போர் புஷ்கரத்தில் நீராடினால் அதன் பலன் கிடைக்கும். 
புஷ்கர விழாவில், நாடு முழுவதும் உள்ள சந்நியாசிகள், அனைத்து ஆதீனகர்த்தர்கள், சங்கராச்சாரியார்கள், பீடாதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் நாள்தோறும் நீராடவுள்ளனர். அந்நேரத்தில், சாது தரிசனம், நெல்லையப்பர் தரிசனம், தீர்த்தத்தின் சிறப்பையும் ஒருங்கே பக்தர்கள் பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

SCROLL FOR NEXT