சாலை விபத்துகளைத் தடுக்க நவீன கருவிகள்
நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க வகை செய்யும் நவீன கருவிகள் வாங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க வகை செய்யும் நவீன கருவிகள் வாங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் திங்கள்கிழமை படித்தளித்த அறிக்கை:-
நொய்யல் ஆறு: மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் சின்னாறு, காஞ்சிமாநதி இணைந்து நொய்யல் ஆறாக உருப்பெற்று அது கரூர் மாவட்டம் நொய்யல் கிராமத்தின் அருகில் காவிரியில் கலக்கிறது. திருப்பூர் மாநகராட்சி மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் நொய்யல் ஆறு கடக்கும்போது, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் மாசடைகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் தடுப்புச் சுவர் அமைத்து, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படும். இதற்காக, கழிவுநீர் வடிகால் அமைத்தல், சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்கல், நடைபாதை அமைத்தல், கரையோர பூங்கா மற்றும் அலங்கார விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.150 கோடியில் செயல்படுத்தப்படும்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வரும் காலத்தில் நொய்யல் ஆறு மாசடையாமல் இருப்பதற்கான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.
சாலை விபத்துகள்: நெடுஞ்சாலைகளில் அதிகமாக சாலை விபத்துகள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து அந்த இடங்களில் சோதனை அடிப்படையில், வாகனப் பதிவெண் பலகையைப் படிக்கும் தானியங்கி புகைப்படக் கருவிகள், வாகன கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். இவை ரூ.25.23 கோடியில் சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.