போராட்டத்தை ஒடுக்கும் அரசின் முயற்சி வெற்றி பெறாது'
போராட்டத்தை ஒடுக்கும் அரசின் முயற்சி வெற்றி பெறாது என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.
போராட்டத்தை ஒடுக்கும் அரசின் முயற்சி வெற்றி பெறாது என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற 2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள்' என்ற நூல் அறிமுக விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
நாட்டில் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டத்தை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் அல்லது போராடினாலும், அவர்களை ஒடுக்குவதற்குத் தமிழக அரசு முயற்சி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எட்டு வழிச்சாலை திட்ட எதிர்ப்புப் போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், மீத்தேன், எரிவாயு எதிர்ப்புப் போராட்டம் என எந்தப் போராட்டமாக இருந்தாலும், அவை மக்களால் உருவாக்கப்படுகின்றன. இதற்காகக் குரல் கொடுக்கிற கட்சிகளையோ அல்லது அமைப்புகளையோ ஒடுக்குவதற்கு முயற்சி செய்வது ஒருபோதும் வெற்றி பெறாது என்பதை இந்த அரசு உணர வேண்டும். இல்லாவிட்டால் மிகப் பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதற்குத் தூத்துக்குடி போராட்டம் ஒரு எடுத்துக்காட்டு என்பதை அரசுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
லோக் ஆயுக்த சட்டம் நீண்ட காலத்துக்கு முன்பே இந்த மாநிலத்தில் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மிகத் தாமதமாகக் கொண்டு வந்துள்ளனர். இப்போதாவது, அதைச் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றார் நெடுமாறன்.