காவிரி வரவையடுத்து கல்லணையில் இருந்து 17 ஆயிரம் கன அடி நீர் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை தாண்டியதால் டெல்டா பாசனத்துக்காக கடந்த 19-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், மாயனூர் கதவணையில் இருந்து 19 ஆயிரம் கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டு திருச்சி வந்தடைந்தது. இதனிடையே முக்கொம்பு மேலணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் நொடிக்கு 2 ஆயிரம் கன அடிவீதம் திறக்கப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணை வேகமாக நிரம்பியது.
இந்நிலையில், கல்லணையில் இருந்து நொடிக்கு 17,000 கன அடி நீர் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ். மணியன், நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர். எனவே காவிரி ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கல்லணையில் நீரை சேமிக்க முடியாது. மாறாக வெள்ளாறு, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளுக்கு மடை மாற்றும் ஆறாகத் தான் கல்லணை கால்வாய் பயன்படுகிறது. இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட அனைத்து காவிரி பாசனப் பகுதிகளுக்கும் நீர் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.