ராஜீவ் குற்றவாளிகள் விடுதலை: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கேற்ப நல்ல முடிவு: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கேற்ப நல்ல முடிவு எடுப்போம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கேற்ப நல்ல முடிவு எடுப்போம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
சட்டப்பேரவையில் மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி பேசியது: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகளை அரசு விடுதலை செய்வது வரவேற்கத்தக்கது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அதிமுக அரசு ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ராகுல் காந்தியும் அவர்களை மன்னித்து விட்டதாகக் கூறியுள்ளார். எனவே, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதில் அரசுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 7 பேரையும் விடுவிப்பது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மூன்று மாதம் அவகாசம் அளித்து ஏப். 23-க்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், இதுவரை மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.
இந்த விவகாரத்தைப் பொருத்தவரையில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கிறதோ, அதற்கேற்ப தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்றார்.
சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது: தமிழகத்தில் நோட்டரி பப்ளிக் அதிகாரிகள் (சான்றுறுதி அதிகாரிகள்) 1,403 பேர் உள்ளனர். இதனை மத்திய அரசின் அனுமதியுடன் 2,500-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். முதல்வராக ஜெயலலிதா இருந்த கடந்த 5 ஆண்டுகளில் ரூ.734 கோடி நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புக்காக ஒதுக்கப்பட்டன. தற்போது கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.737 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்தின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று.
ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில் 223 நீதிமன்றங்கள் புதிதாகத் திறக்கத் திட்டமிடப்பட்டு 160 நீதிமன்றங்கள் திறக்கப்பட்டன.
கடந்த 2 ஆண்டுகளில் 198 நீதிமன்றங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டு, 161 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.