முகப்பு
தமிழ்நாடு

மருந்துகள் இல்லாத மக்கள் மருந்தகங்கள்!

நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும், மருந்துகள் வாங்க முடியாமல் ஏழைகள் நோய் பாதிப்பில் உயிரிழப்பை சந்திக்கக் கூடாது என்ற உன்னத நோக்கத்தில், பிர

தமிழ்நாடு

மருந்துகள் இல்லாத மக்கள் மருந்தகங்கள்!

நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும், மருந்துகள் வாங்க முடியாமல் ஏழைகள் நோய் பாதிப்பில் உயிரிழப்பை சந்திக்கக் கூடாது என்ற உன்னத நோக்கத்தில், பிர

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:16 PM
பகிர்:

நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும், மருந்துகள் வாங்க முடியாமல் ஏழைகள் நோய் பாதிப்பில் உயிரிழப்பை சந்திக்கக் கூடாது என்ற உன்னத நோக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையின் பேரில், மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்பட்டு, இயங்கி வருகின்றன.

தமிழகத்திலும் 2015-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் மக்கள் மருந்தக மையங்கள் பரவலாக திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. பிரதம மந்திரி பாரதிய ஜன் ஒளஷதி கேந்திரா என்ற திட்டத்தில், மத்திய அரசின் மருந்துகள் துறையின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த மருந்தகங்களில், மிகக் குறைந்த விலைக்கு தரமான மருந்துகள் வழங்கப்படுவது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த மருந்தகங்களில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோயாளிக்கான மருந்துகள், செரிமான பாதிப்பு, கொழுப்பு தடுப்பு மருந்துகள், சத்து மாத்திரைகள், இருமல், கண், தோல் உள்ளிட்ட முக்கிய உடல் நிலை பாதிப்புக்கான உயிர் காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை பிற மருந்தகங்களில் வாங்கும் விலையைவிட 70% குறைந்த விலைக்கு, மக்கள் மருந்தகங்களில் கிடைத்து வருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மாதந்தோறும் மாத்திரை, மருந்துகளை செலவிடும் ஏராளமானோர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பிற மருந்தகங்களில் சர்க்கரை நோய்க்கு மாதம் ரூ.800-க்கு வாங்குவது, இங்கு ரூ.200-க்கு மலிவு விலையில் கிடைப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். பிற மருந்துகளும் மிகக் குறைவான விலைக்கு கிடைக்கிறது. இதுதொடர்பாக, மருந்து விலையை ஒப்பிட்டு காண்பித்து மத்திய அரசு சார்பில் விளம்பரப்படுத்தியும் வருகின்றனர். ஆனால், பல்வேறு இடங்களில் செயல்படும் மக்கள் மருந்தகங்களில் போதிய மருந்துகள் கிடைக்காமல் நீண்டகாலமாக தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மருந்தக விற்பனையாளர்கள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 330 மக்கள் மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில், கடந்தாண்டில் 10 மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்பட்டன. விழுப்புரத்தில் கிழக்கு பாண்டி சாலை எல்ஐசி அலுவலகம் அருகேயும், திருச்சி சாலை இ.எஸ். மருத்துவமனை அருகேயும், பேருந்து நிலையம் அருகே என 3 மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு சுமார் 800 வகையான அத்தியாவசிய மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஓராண்டாக சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்தனர்.

இந்த நிலையில், போதிய மருந்துகளை மக்கள் மருந்தகங்களுக்கு விநியோகம் செய்யாமல் தொடக்க காலத்திலிருந்தே தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, மக்களிடம் இந்தச் சிறப்புத் திட்டத்தை தெரியாமல் செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய மாத்திரை, மருந்துகளும் போதிய இருப்பு அனுப்பி வைக்காமல் போனதால், மருந்தகங்களில் பெரும்பாலான மருந்துகள் இல்லாத நிலை காணப்படுகிறது. பஞ்சுகள், கத்திரி, ஊசிகள் போன்ற உபகரணங்களும் வழங்கப்படாமல் உள்ளது. தமிழகத்துக்கு சேலம், சிவகங்கையில் உள்ள மொத்த விற்பனையாளர்களே மருந்துகளை அனுப்பி வருகின்றனர். அவர்களிடம் கேட்டால், வருவதை நாங்கள் அனுப்புகிறோம், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள மொத்த விற்பனை கிடங்கிலிருந்து ஒதுக்கீடு வருவதில்லை என்கின்றனர்.

இதனால், விழுப்புரத்தில் செயல்பட்ட 3 மருந்தகங்களில் ஒரு மருந்தகம் மூடப்பட்டது. இதர மாவட்டங்களிலும், மக்கள் மருந்தகங்கள் வரவேற்பை பெற்ற நிலையில், போதிய மருந்துகள் கிடைக்காததால், மருந்தக ஊழியர்களும், விற்பனை மையத்தினரும் விற்பனையின்றி பெயரளவில் மருந்தகங்களை நடத்தி வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்த மக்கள் மருந்தகங்களுக்கு போதிய மருந்து, மாத்திரைகளை வழங்கி, பிரதமரின் உன்னத திட்டத்தை உயிர்ப்பிக்க செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →