முகப்பு
தமிழ்நாடு

செயின் பறிப்பைத் தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்கும் அடுத்த குற்றம் இது!

வேறெந்த மாவட்டங்களிலும் இல்லாத அளவுக்கு சென்னையில் செயின் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது அதற்கு சவால் விடுக்கும் வகையில் வழிப்பறி சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

Updated On : 12 ஜூன், 2018 at 2:35 PM
பகிர்:

வேறெந்த மாவட்டங்களிலும் இல்லாத அளவுக்கு சென்னையில் செயின் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது அதற்கு சவால் விடுக்கும் வகையில் வழிப்பறி சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 14 இடங்களில் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. சில சம்பவங்களில் கொள்ளையர்கள் பொருட்களை பறித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களை கடுமையாக தாக்கியும் உள்ளனர். இந்த வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

செல்போன், தங்க நகை, பணம் போன்றவை கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்துள்ளது. திடீரென வந்து, மிரட்டி, கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்கு அழைக்கும் முன், கொள்ளையர்கள் சம்பவ இடத்தில் இருந்து மின்னல் வேகத்தில் பறந்து விடுகின்றனர்.

Advertisement

அதற்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமையும் இதேப்போன்ற வழிப்பறி நடந்திருப்பதாகவும், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

அனைத்துக் கொள்ளைச் சம்பவங்கள் குறித்தும் தகவல்களை திரட்டிய காவல்துறையினர் கூறுவது என்னவென்றால், இந்த கொள்ளைச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை 10.45 மணிக்குத் தொடங்கி, அதிகாலை 3 மணி வரை நடந்துள்ளது. ஒவ்வொரு கொள்ளைச் சம்பவத்துக்கும் சுமார் 30 நிமிடம் இடைவெளி இருந்துள்ளது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் மத்திய சென்னை மற்றும் தெற்கு சென்னைப் பகுதிகளில் அதாவது  கோயம்பேடு, அசோக்நகர், அரும்பாக்கம், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது. சுமார் 2 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், 15 சவரன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

கொள்ளையர்கள் பற்றி இதுவரை எந்த துப்பும் துலங்கவில்லை. இந்த அனைத்து கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கொள்ளை கும்பலா? அல்லது ஒரே கும்பலைச் சேர்ந்த கொள்ளையர்களா? என பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன.

சென்னையில் நடந்த வழிப்பறி சம்பவங்களின் விவரம்: 

புரசைவாக்கம் தானா தெருவைச் சேர்ந்த ச.லீலா ஜெயின் (53), ஞாயிற்றுக்கிழமை நடந்து வந்தார். அவரிடமிருந்து விலை உயர்ந்த செல்லிடப்பேசி, ரூ. 2 ஆயிரம் பறித்துச் செல்லப்பட்டது.

மண்ணடி ஜோன்ஸ் தெருவைச் சேர்ந்த அ.முகமது பஷீர் (25), புரசைவாக்கத்தில் செல்லிடப் பேசியில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த இருவர் செல்லிடப் பேசியைப் பறித்துச் சென்றனர்.

அயனாவரம் நாகேஸ்வர குருசாமி தெருவைச் சேர்ந்த மு.கார்த்திக் மாரிமுத்துவிடம் (27) ஞாயிற்றுக்கிழமை செல்லிடப்பேசி பறித்துச் செல்லப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், தவணை முறையில் செல்போன் வாங்கியிருந்தேன். அது கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. புகார் அளித்துள்ளேன். இன்னும் தவணை முடியவில்லை. செல்போனும் போன நிலையில், மீதமிருக்கும் தவணையையும் கட்டியாக வேண்டிய நிலையில் உள்ளேன் என்கிறார் கவலையோடு.

அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ஜோ.பானுவிடம் (40), இரு இளைஞர்கள் 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

அயனாவரம் பழனி ஆண்டவர் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ந.ஜெயகோபால் (48) இருவரை ஏற்றிக் கொண்டு வாடகைக்குச் சென்றார். திடீரென இருவரும் ஜெயகோபாலைத் தாக்கி பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

அயனாவரம் போலீஸார் வழக்குப் பதிந்து இதே பகுதியைச் சேர்ந்த ம.மதன் (38), க.மணிகண்டன் (19) ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கோயம்பேடு: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தரத்தூரைச் சேர்ந்த பெ.பெருமாள் (32), கோயம்பேடு 100 அடி சாலையில் வரும்போது செல்லிடப்பேசி பறித்துச் செல்லப்பட்டது.

நுங்கம்பாக்கம் கேமிகா (24), கோயம்பேட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனர்.

திருமங்கலம்: பிகாரைச் சேர்ந்த அப்டேஷ்குமார் (30) ஞாயிற்றுக்கிழமை இரவு திருமங்கலம் 200 அடி சாலையில் நடந்து சென்றபோது செல்லிடப்பேசி பறிக்கப்பட்டது.

திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து பாடியைச் சேர்ந்த ப.சூர்யா (19), மு.அஜித்குமார் (19), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

சிந்தாதிரிப்பேட்டை: கொளத்தூர் அன்னை சத்யா நகர் ஆட்டோ ஓட்டுநர் கா.சரவணன் (25). சிந்தாரிப்பேட்டை மே தின பூங்கா நின்றபோது, செல்லிடப்பேசி பறித்துச் செல்லப்பட்டது. இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை வினோத் (22), மு.முத்துவீரன் (21) கைது செய்யப்பட்டனர்.

இவை தவிர, அரும்பாக்கம் அய்யப்பன், தமிழரசன், அசோக் நகரில் சரவணகுமார், விருகம்பாக்கத்தில் சரண்யா, புரசைவாக்கத்தில் சந்திரபிரகாஷ் ஆகியோரிடம் தங்க நகைகள், பணம், செல்லிடப்பேசிகளை அடையாளம் தெரியாதவர்கள் பறித்துச் சென்றனர்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 14 இடங்களில் வழிப்பறிச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இச் சம்பவங்களில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.