தமிழ்நாடு

ஏலகிரியில் வீர ராஜேந்திரன் காலத்து எழுத்துடை நடுகற்கள் கண்டெடுப்பு

தினமணி

ஏலகிரி மலையில் வீர ராஜேந்திரன் காலத்து எழுத்துடை நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 ஏலகிரிமலை தொன்போஸ்கோ கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் சு.ராஜா இந்த நடுகல்லை கண்டெடுத்துள்ளார்.
 இதுகுறித்து அவர் கூறியதாவது: இக்கல்வெட்டு மங்களம் பகுதியில் உள்ள காட்டில் கண்டெடுக்கப்பட்டது. இது, 80 அங்குல உயரமும், 45 அங்குல அகலமும் உள்ளது. இக்கல்லில் உள்ள வீரனின் இடது கையில் நெடிய வில்லும், கூரிய வாளும் உள்ளன. கைகளிலும், கால்களிலும் கடகங்கள் உள்ளன. கால்களுக்கு இடையில் சங்கு உள்ளது. வீரனின் இருபக்கமும் சிறிய உருவிலான மனித வடிவங்கள் காணப்படுகின்றன. வீரனின் இடப்பக்கத்தில் இருந்து தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு முற்று பெறவில்லை.
 இது, வீர ராஜேந்திரன் காலத்தில் நிகரிலி சோழ மண்டலத்தில் தகடூர் (தருமபுரி) நாட்டில் இருந்த பயி நாட்டில் ஏலகுன்றில் (ஏலகிரி) இருந்துள்ளது. அப்போது, பாலாற்றுப் பகுதியில் சிற்றரசன் ஒருவன் ஆட்சியில் இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் அறிஞர் ராஜவேல் சுப்ரமணி உதவியுடன் அறிய முடிகிறது.
 மற்றொரு நடுகல்...
 மங்களம் வயல் பகுதியில் குதிரையைக் கொன்று வீரமரணம் அடைந்த வீரனுக்கும் எழுத்துடன் கூடிய மற்றொரு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இக்கல்லானது 85 அங்குலம் உயரமும், 28 அங்குலம் அகலமும் உள்ளது. நடுகல்லின் இடது பக்கத்தில் குதிரையும், வீரனின் வலது கையில் வில்லும், இடது கையில் அம்பும் உள்ளன. இடைக்கச்சில் வாள் உள்ளது. நடுகல்லின் மேற்பகுதி உடைந்து காணப்படுகிறது. இந்த நடுகல்லில் ஒரு சில எழுத்துகள் மட்டுமே காணப்படுகின்றன. வீரனின் கை, கால், கழுத்திலும் எவ்வித அணிகலங்களும் காணப்படவில்லை. எனவே இந்நடுகல் மிகப் பழைமையானதாக அறிய முடிகிறது. இந்நடுகல் சேதமடைந்த நிலையில் உள்ளது.
 இதே பகுதியில் இடது கையில் தாமரை மலருடனும், கால்களில் கடகங்கள் அணிந்தும் வீரமாசதி கல்லும் தனியே காணப்படுகிறது. இக்கல் 28 அங்குல நீளமும், 15 அங்குல அகலமும் உள்ளது. இதனோடு இந்த ஊரிலேயே மலை அடிவாரத்தில் தனியாக கல்லெடுக்காமல் பாறையிலேயே செதுக்கப்பட்ட வீரமாசதி கல்லும் உள்ளது. இக்கல்லில் உள்ள பெண் உருவானது 25 அங்குலம் உயரமும், 24 அங்குலம் அகலமும் உள்ளது. இடது கையில் வாளும், வலது கையில் தாமரை மலரும் காணப்படுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT