ஹார்வர்டு பல்கலை. தமிழ் இருக்கைக்கு காமராஜர் பல்கலை. ரூ.20.79 லட்சம் : ஒரு மாத ஊதியம் வழங்குகிறார் ஆட்சியர்
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.20.79 லட்சம் நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.20.79 லட்சம் நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பாக துணைவேந்தர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன்வந்தனர். இதன்படி திரட்டப்பட்ட ரூ.20.79 லட்சம் நிதியை வழங்கும் நிகழ்ச்சி, பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை தலைமை வகித்தார். அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமே முதன்முறையாக தமிழ் இருக்கைக்கு நிதி வழங்குகிறது எனக்குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் பேசுகையில், உலக அளவில் தமிழின் பெருமையை கொண்டு சேர்க்கும் வகையில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிதி அளித்திருப்பது பாராட்டத்தக்கது என்றார். மேலும், தனது பங்களிப்பாக ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அறிவித்தார்.
தமிழ் இருக்கைக்கான நிதியை ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக் குழும நிறுவனத் தலைவர் விஜய்ஜானகிராமன் பெற்றுக்கொண்டார். அவர் பேசுகையில், தமிழின் கலாசார நகராக விளங்கும் மதுரையில் உள்ள பல்கலைக்கழகம் நிதி வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது என்றார்.