தமிழ்நாடு

வாகனச் சோதனையில் கர்ப்பிணி சாவு: காவல் ஆய்வாளருக்கு சிறை

DIN

வாகனச் சோதனையின்போது, போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி உஷா உயிரிழந்த சம்பவத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது மரணம் விளைவிக்கும் குற்றம்- 304 (2), மனிதனின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுதல் - 336 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
தஞ்சாவூர் மாவட்டம், சூலமங்கலத்தைச் சேர்ந்த தம்பதி ராஜா (36), உஷா (30) புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் துவாக்குடி அருகே வந்தபோது, வாகனச் சோதனையில் நிற்காமல் சென்றதாகக் கருதி அவர்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று எட்டி உதைத்ததில் சம்பவ இடத்திலேயே உஷா உயிரிழந்தார். ராஜா காயமடைந்தார். 
இதையடுத்து, கிளர்ந்தெழுந்த ஏராளமான பொதுமக்கள் திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் 4 மணிநேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். உஷாவின் சடலம், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
2 ஆம் நாள் போராட்டம்: உஷாவின் சடலத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை வளாகத்திலேயே அவரது உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகரக் காவல் துறை துணை ஆணையர் சக்தி கணேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டிருந்தனர். வருவாய்த் துறையினர், காவல் துறையினர் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் விலக்கிக்கொள்ளப்படவில்லை.
மாலையில் சமரசம்: காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்காக மாற்றம் செய்வது, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட 28 பேரில் பள்ளி மாணவர்கள் இருவரை உடனடியாக விடுவிப்பது என வாய்மொழியாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து 
உஷாவின் சடலத்தைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள், பொதுமக்கள் திருச்சி கே.கே.நகரை அடுத்த எல்ஐசி காலனியில் உள்ள உஷாவின் தாய் வீட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். 
கமல், சீமான் ஆறுதல்
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன், திருச்சி மாவட்ட பொறுப்பாளர் செல்லிடப்பேசி மூலம், உஷாவின் கணவர் ராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார். 
இதேபோல, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், போராட்ட களத்துக்கு நேரில் வருகை தந்து உஷாவின் கணவர் ராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜும் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தில் முறையீடு 
திருச்சி அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தை தாமாக முன் வந்து அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் முறையீட்டை, மனுவாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது .
வழக்குரைஞர் நீலமேகம் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் பாத்திமா ஆகியோர் நீதிபதிகள் என்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வியாழக்கிழமை இது குறித்து முறையிட்டனர். 
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் மார்ச் 7ஆம் தேதி இரவு போலீஸார் நடத்திய வாகனச் சோதனையின்போது, அவ்வழியாக சென்ற இரு சக்கர வாகனத்தை போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில், கர்ப்பிணி உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் ராஜா பலத்த காயமடைந்தார். 
சமீப காலங்களில், வாகனச் சோதனை எனும் பெயரில் காவல்துறையினர் சாலையின் நடுவே வாகனங்களை, நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். 
எனவே, கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றனர். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT