முகப்பு
தமிழ்நாடு

முறைப்படுத்தப்படுமா மலையேற்றப் பயிற்சி? 

தமிழகம் முழுவதும் தனியார் சுற்றுலா அமைப்புகள் மூலம் நடைபெற்று வரும் மலையேற்றப் பயிற்சி உள்ளிட்ட வனச் சுற்றுலாவை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:28 PM
பகிர்:

தமிழகம் முழுவதும் தனியார் சுற்றுலா அமைப்புகள் மூலம் நடைபெற்று வரும் மலையேற்றப் பயிற்சி உள்ளிட்ட வனச் சுற்றுலாவை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை குரங்கணி சம்பவத்தை அடுத்து வலுப்பெற்றுள்ளது.

தேனி மாவட்டம், குரங்கணியில் வனத் துறையினரின் உரிய அனுமதியின்றி சென்றதாக கூறப்படும் மலையேற்றப் பயிற்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தனியார் அமைப்பு மூலம் இணையதளத்தின் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெறும் இதுபோன்ற வனச் சுற்றுலாவை முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்த துயர சம்பவம் உணர்த்தியுள்ளது.

அண்மைக்காலமாக மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரிவோர் மனஅழுத்தத்தைப் போக்குவதற்காக தனியார் அமைப்புகள் மூலம் சுற்றுலா செல்வதற்கான இடங்களைத் தேர்வு செய்கின்றனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் இடங்களின் காலசூழல், புவியியல் அமைப்பு, அங்கு எவ்வகையான வன விலங்குகள் வாழ்கின்றன என்பன உள்ளிட்ட எவ்வித தகவல்கள் இல்லாமலும், முறையான பயிற்சி இல்லாமலும் வனத்துக்குள் செல்வதே குரங்கணி உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

காட்டுத் தீ பரவல் அதிகரிப்பு: இதுகுறித்து 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் நிர்வாகி சுந்தர்ராஜன் கூறியதாவது :

தனியார் அமைப்பு மூலம் இதுபோன்ற மலையேற்றப் பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக வனப் பகுதிக்குச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட வனம் தொடர்பான அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், கடந்த 3 ஆண்டுகளாக அதிக அளவிலான காட்டுத் தீ பரவி வருவதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த காலங்களைக் காட்டிலும் 350 சதவீதம் அதிகமாகும்.

முறையான பயிற்சி தேவை: இதேபோல், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் குஜராத் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 51 மாவட்டங்களில் 30 சதவீதம் வரை மழைப் பொழிவு குறைந்துள்ளது. இதுபோன்ற பாதகமான புள்ளிவிவரங்கள் ஆய்வு அறிக்கையில் இருந்தும், கோடைக்காலத்தின் தொடக்கம் என்பதை அறிந்தும், குரங்கணி வனப் பகுதியில் தீத் தடுப்பு பணி மேற்கொள்ளப்படாததும், தீத் தடுப்புக் காவலர்கள் பணியமர்த்தப்படாததும் இந்த விபத்துக்கு மற்றொரு முக்கியக் காரணம். மேலும், இதுபோன்ற மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவோருக்கு முறையான பயிற்சி அளிப்பதுடன், விபத்தில் சிக்கிக் கொள்வோரை மீட்பதற்கும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

மலையேற்றத்தை முறைப்படுத்த வேண்டும்: இதுகுறித்து 'ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறியதாவது:

பிப்ரவரி மாதம் தொடக்கம் முதல் பசுமைமாறா காடுகள் தவிர மற்ற காடுகள் எல்லாமே காய்ந்து காணப்படும். சின்ன தீப்பொறி பட்டால்கூட தீ விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. குரங்கணி சம்பவத்தில் மனிதத் தவறு காரணமாகவே தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் வனத் துறையினருக்கு முறையாக தெரிவிக்காமல் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், 30-க்கும் மேற்பட்டோர் வனத்துக்குள் நுழையும்போது, அதுகுறித்து வனத் துறையினருக்குத் தெரியாமல் போனது வியப்பாக உள்ளது.

மேலும், மலையேற்ற பயிற்சிக்குச் செல்பவர்களுடன் வனத்தை நன்கு அறிந்த உள்ளூர் நபரும், வனத் துறை அதிகாரியும் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு குழுவில் 12 பேர் மட்டுமே இருக்க வேண்டும். விசில், முகமூடி, தண்ணீர், டார்ச் லைட், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. ஆனால், குரங்கணி தீ விவகாரத்தில் இவையெல்லாம் பின்பற்றப்பட்டதா என்பது தெரியவில்லை. எனவே, இணையதளம் மூலம் தனியார் அமைப்பு ஒருங்கிணைக்கும் இதுபோன்ற மலையேற்ற பயிற்சி உள்ளிட்ட வனச் சுற்றுலாவை முறைப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

விதிமுறைகள் என்ன?: வனத்துக்குள் சுற்றுலா, மலையேற்றப் பயிற்சி செல்வோருக்கான விதிமுறைகளை வனத்துறை வகுத்துள்ளது. அதன்படி, வனத்துக்குள் செல்வோர் கண்டிப்பாக வனத் துறையினரின் அனுமதி பெற்று அதிகாரி ஒருவருடன் தான் செல்ல வேண்டும். 

எத்தனை பேர் செல்கிறார்கள், அவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை வனத் துறைக்கு கொடுக்க வேண்டும். 12 பேருக்கு மேல் குழுவாகச் செல்லக் கூடாது. அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும். இசைக் கருவிகள், தீப்பற்றும் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு செல்லக் கூடாது. வன விலங்குகளுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. அவற்றுக்கு உணவு அளிப்பதுடன், வெள்ளை நிறத்திலான உடைகளுக்குப் பதிலாக பச்சை நிறம் அதிகம் உள்ள ஆடைகளை அணிய வேண்டும்.

வாசனை திரவியங்களைப் பயன்படுத்தக்கூடாது. முதலுதவி சிசிச்சைப் பெட்டிகளை கொண்டு செல்ல வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் வனத்துக்குள் தங்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.