சென்னை: ஒன்பது பேர் உயிரிழக்க காரணமான குரங்கணி தீ விபத்து சம்பவத்தில், சென்னையிலிருந்து 24 பேரை அழைத்துச் சென்ற 'சென்னை ட்ரெக்கிங் கிளப்' அமைப்பின் அலுவலகம் இழுத்து மூடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற 36 பேர், ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த பயிற்சியில் பங்கற்ற 36 பேரில் சென்னையில் இருந்து 24 பேர் சென்றுள்ளனர். இவர்களை 'சென்னை ட்ரெக்கிங் கிளப்' என்ற தன்னார்வ அமைப்பு அழைத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் விபத்து ஏற்பட்ட உடன் மேலதிக தகவல்களை பெறுவதற்காக சென்னை பாலவாக்கத்தில் உள்ள அந்த அமைப்பை காவல்துறையினர் அணுகினர்.
ஆனால் அந்த அமைப்பின் அலுவலகமானது மூடப்பட்டிருந்தது. அந்த அமைப்பின் இணையதளத்தில் கூட அமைப்பை நடத்துபவர்கள் தொடர்பான எந்த விபரமும் கூறப்படவில்லை. அத்துடன் தொடர்புக்கு என ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு வெளிப்புற நிகழ்ச்சிகள், விளையாட்டு, சுற்றுச் சூழல் நிகழ்வுகள் மற்றும் சமூக செயல்பாடுகள் நடைபெறுவதாக கூறப்பட்டு, அது தொடர்பான புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
தங்கள் லாப நோக்கமற்ற தன்னார்வலர்களை கொண்டு இயங்கும் ஒரு அமைப்பு என்றும் அத்தளம் தகவல் தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.