தமிழ்நாடு

குமரி கடலில் புயல் சின்னம்: 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை: உறவினர்கள் அச்சம்

தினமணி

கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ள நிலையில், கடலுக்குள் சென்ற 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைதிரும்பாததால் அவர்களது உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடலில் தெற்கு இலங்கைக்கும், மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரிக்கும் இடையே நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை தென்மேற்கு இலங்கை, மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே தொடர்ந்து நிலைகொண்டுள்ளது.

இது மேற்கு- வடமேற்கு திசை நோக்கி தென்கிழக்கு அரபிக் கடலுக்கு நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் குமரி மாவட்டம், குளச்சல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வரையிலான கடல் பகுதியில் மார்ச் 14 ஆம் தேதி நள்ளிரவு வரை 7 முதல் 9 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழக்கூடும்.

எனவே, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், முட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டினம் என 4 மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. இந்த துறைமுகங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றன. இதில், ஒவ்வொரு படகிலும் 10 முதல் 15 மீனவர்கள் இருப்பர்.

குமரி மாவட்டத்தில் குளச்சல் மற்றும் மேற்கு கடற்கரையோர கிராமங்களான தூத்தூர், வள்ளவிளை, நித்திரவிளை, பூத்துறை, நீரோடி பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அதிக அளவில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்வார்கள். இவர்கள் கரையில் இருந்து 250 முதல் 500 கடல் மைல் தொலைவு வரை சென்று மீன்பிடிப்பர்.

மேலும், கடலுக்குள் 20 முதல் 45 நாள்கள் வரை தங்கியிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு பிறகு கரைதிரும்புவார்கள்.

கடந்த நவம்பர் மாதம் குமரி மாவட்டத்தில் வீசிய ஒக்கி புயலுக்குப் பிறகு கடந்த மாதம்தான் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலை தொடங்கினர். இவ்வாறு குளச்சல், மேற்கு கடற்கரையோர கிராமங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட படகுகளில் 600-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

இதில், சுமார் நூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லாமல் திரும்பிவிட்டனர். சுமார் 500 மீனவர்கள் இன்னும் கரைதிரும்பவில்லை. அவர்களுக்கு சேட்டிலைட் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக மீன்வளத் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் மற்றும் மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், தூத்தூர் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற 500 மீனவர்களின் படகுகள் இன்னும் கரைதிரும்பவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

அவர்கள் கடலின் எந்தப் பகுதியில் உள்ளனர் என்பதை கண்டறிந்து தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம் என்றனர்.

குமரி கடலோரக் கிராமங்களில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைதிரும்பாததால், அவர்களது உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT