தமிழ்நாடு

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

DIN

அரபிக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மினிக்காய் தீவிலிருந்து 130 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நகர்ந்து, அடுத்து வரும் நாள்களில் வலுவிழக்கும்.
இதன் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென்தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் வியாழக்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது.
பலத்த காற்று: குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் குமரிக் கடல், மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு ஆகிய கடற்பகுதிகளில் வியாழக்கிழமை (மார்ச் 15) வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றார் அவர். 
மழை நிலவரம்: புதன்கிழமை காலை நிலவரப்படி, தூத்துக்குடியில் அதிகபட்சமாக 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் 190 மி.மீ., செங்கோட்டை 100 மி.மீ., ஸ்ரீவைகுண்டம் மற்றும் தென்காசியில் 90 மி.மீ., திருச்செந்தூரில் 80 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் 70 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT