மதுரை மாவட்டத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கையடக்கக் கணினி வழியாக பாடம் நடத்தும் முறை செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் பாடத்திட்டத்தை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்களை மாற்றியமைக்கவும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதன்படி புதிய பாடத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான புத்தகங்களும் அச்சிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முதல் வகுப்பில் சேரும் 5 வயது குழந்தைகளுக்கு மிக நவீன முறையில் பாடங்களை கற்பிக்கவும், கையடக்கக் கணினி மூலம் அவர்கள் பாடங்களை கற்று, அதன் வழியே கல்வியைத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களைத் தொடர்ந்து இரண்டாம் வகுப்புக்கான குழந்தைகளுக்கும் கையடக்க கணினி முறையில் பாடம் நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மதுராந்தகம் பகுதியில் அனைவருக்கும் கல்வித்திட்டம் மூலம் கையடக்கக் கணினி முறை கல்வி கற்பித்தல் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்படி முதல் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பாடங்களும் கற்பிக்கப்பட்டுள்ளன.
மதுராந்தகம் பகுதியில் கையடக்க கணினி மூலம் கற்பித்தல் வெற்றி பெற்ற நிலையில், அதைச் சோதனை ரீதியாக மதுரை மாவட்டத்தில் செயல்படுத்த கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி மதுரையில் 15 ஒன்றியங்களில் தலா 2 தொடக்கப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழ் வழிக் கல்விக்கான 15 பள்ளிகளும் அடக்கம். தேர்வான பள்ளிகளில் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கையடக்கக் கணினி வழங்கப்படுகிறது.
இந்த கணினியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய நான்கு பாடங்கள் முதல் கட்டமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கையடக்கக் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட பாடங்களை ஆசிரியர்கள் நடத்தும் போது அதை தாங்கள் வைத்திருக்கும் கணினி திரையில் பார்த்து மாணவ, மாணவியர் கற்கும் வகையில் புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள 30 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரில் 5 மாணவர்களுக்கு ஒரு கையடக்கக் கணினி எனும் அளவில் 159 சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் 38 பேருக்கு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கைடயக்கக் கணினியில் மாணவ, மாணவியர் பெயரை பதிவேற்றம் செய்யவும், அதன் மூலம் அவர்களுக்கான கையடக்கக் கணினி சாதன குறியீடை உருவாக்கவும், கற்பித்தல் முறையை மாணவர்களுக்கு செயல்படுத்திக் காட்டவும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நவீன முறை கற்றல் முறை குறித்து அனைவருக்கும் கல்வித்திட்ட மதுரை மாவட்ட உதவித் திட்ட அலுவலர் வி.சிவகுமார் கூறுகையில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக்கான கையடக்கக் கணினி நவீன கற்றல் முறையானது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் முழுமையான அளவில் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும். கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
கையடக்கக் கணினி கற்றல் முறை செயல்படுத்தும் பள்ளி விவரம்
மதுரை மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு கையடக்கக் கணினி முறை செயல்படுத்தும் அரசு தொடக்கப் பள்ளிகள் விவரம்: நாராயணபுரம், உலகனேரி, அலங்காநல்லூர் குறவன்குளம், சேக்கிப்பட்டி, எம்.வெள்ளாளபட்டி, மீனாட்சிநகர் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் ஆதிமூலம் பிள்ளை மாநகராட்சி பள்ளி, பாண்டிய வெள்ளாளர் மாநகராட்சிப் பள்ளி, தெற்குவெளிவீதி எண் 1 மாநகராட்சி தொடக்கப் பள்ளி, அனுப்பானடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பரவை அரசுப் பள்ளி, குட்லாடம்பட்டி பள்ளி, கொத்தானிபட்டி பள்ளி, திருமங்கலம் தங்களாச்சேரி, அலப்பச்சேரி, சூரக்குளம், துவரிமான் ஆகிய அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டு முதலே குழந்தைகளுக்கு கையடக்கக் கணினி மூலம் பாடங்கள் கற்றுத்தரப்படவுள்ளன.
அதே போல் தொடக்கப் பள்ளி ஆசிரியைகளுக்கு தற்போது கையடக்கக்கணினியை வைத்து செயல்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு முதல் தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகள் அனைத்தும் சிலேட்டு, குச்சி மற்றும் கரும்பலகை, சாக்பீஸ் எதுவுமின்றி முழுக்க முழுக்க கணினியிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.